Tuesday, July 25, 2017

நிரந்தர வேளாண் கலாசாரப் பண்ணை: விவசாயி பாமயனின் பன்முகம்


மதுரையில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி மானாவாரியாக நடக்கிறது. 
தண்ணீர் பஞ்சம் மிகுந்த இப்பகுதியில் விவசாயத்தில் சாதனை படைப்பது சாதாரண காரியமல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பை மூலதனமாக கொண்டு விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் இயற்கை விவசாயி பாமயன். திருமங்கலம் - டி.கல்லுப்பட்டி ரோட்டில் சோலைப்பட்டி விலக்கில் 'நிரந்த வேளாண் கலாச்சாரப் பண்ணை' (பெர்மனன்ட் அக்ரி கல்சர் பார்ம்) நடத்தி வருகிறார். இங்கு சுட்டெரிக்கும் வெயிலில் சொட்டு நீர் கூட உடனே ஆவியாகி விடும். உப்புச்சுவை மிக்க நீரில் இயற்கை விவசாயம் செய்வதற்காக உப்புச்சுவையை இயற்கை முறையில் மாற்றி தினமும் பயன் படுத்துகிறார் பாமயன்.இது எப்படி சாத்தியம் என்பது குறித்து பாமயன் கூறியதாவது: நிரந்த வேளாண் கலாசாரப் பண்ணையை உருவாக்குவதற்காக 
6 அடி ஆழம், 40 அடி அகலத்தில் மண் தொட்டி அமைத்தேன். அதில் பாலிதீன் பாய் விரித்து 194 லட்சம் லிட்டர் உப்பு நீர் தேக்கினேன். 
உப்புச்சுவை மற்றும் தண்ணீர் சத்துள்ளதாக (அமிலோ ஆசிட் வாட்டர்) மாற்றுவதற்காக தலா 400 எண்ணிக்கையில் ஜிலேபி கெண்டை, கட்லா, புது கெண்டை, விரால் மீன் குஞ்சுகளை தொட்டியில் விட்டுள்ளேன். மீன் குஞ்சுகளின் கழிவுகள் தண்ணீரை சத்துள்ளதாக மாற்றி விடுகிறது. அந்த தண்ணீரை வயல்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பாய்ச்சுகிறேன். மீண்டும் தொட்டியில் தண்ணீர் நிரப்புகிறேன். தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மண் இல்லாத உணவு தானியங்கள் வளர்த்து வருகிறேன். தொட்டி அமைக்க 70 ஆயிரம் ரூபாய் செலவானது. அவரவர் வசதிக்கேற்ப குறைந்த செலவிலும் தொட்டி அமைக்கலாம். நிரந்தர வேளாண் கலாசாரப் பண்ணை என்பது மீன் கழிவு நீரில் விவசாயம், மாட்டுச்சாணத்தில் மண்புழு உரம், மீன்களுக்கு உணவாகும் மண்புழு, மீன் வளர்ப்பில் லாபம் என ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தை குறிக்கும் என்றார்.
தொடர்புக்கு 98420 48317.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Source : Dinamalar

பருத்தியை காயப்படுத்தும் அமெரிக்கன் காய்ப்புழு

பருத்தி பயிரில் அமெரிக்கன் காய்ப்புழு எனும் பச்சைக் காய்ப்புழுவின் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என விவசாயிகள் கண்காணிக்க வேண்டும். இத் தாக்குதலுக்கு உள்ளான பூ மொட்டுகள் விரிந்து பின்னர் விழுந்து விடும். பாதித்த பகுதிகளில் வட்ட வடிவமான துளை காணப்படும். துளைகள் எச்சத்தினால் அடைக்கப்படாமல் சுத்தமாக காணப்படும். துளையின் கீழ் உள்ள புல்லி வட்ட இதழ்களில் புழு வெளியேற்றிய கழிவுகளை காணலாம். தழைச்சத்து உரம் அதிகப்பட்டு செழித்து அடர்ந்து வளர்ந்த பயிரில் அமெரிக்கன் காய்ப்புழுத்தாக்குதல் அதிகமாக இருக்கும். அமெரிக்கன் காய்ப்புழுவினை கட்டுப்படுத்த புரோபினோபாஸ் (2 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீர்) அல்லது ஸ்பின்னோசாடு (0.5 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீர்) மருந்தினை பயன்படுத்தலாம். பயிரின் வளர்ச்சியினை பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்து கரைசல் தேவைப்படும். மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் ஆகிய திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொண்டு மாலை நேரத்தில் மருந்து தெளிக்கலாம். இதனால் புழு நல்ல முறையில் கட்டுப்படுவதோடு, நன்மை தரும் 
பூச்சிகள் பாதுகாக்கப்படும்.
முனைவர் ம.குணசேகரன்
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்.

Source : Dinamalar

50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்


பிள்ளை போல் வெள்ளை நிறத்தில் சிரிக்கும் சம்பங்கிப் பூக்கள் தான் என்னை ஜெயிக்க வைக்கிறது,'' என்கிறார், திண்டுக்கல் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன். இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலும் 50 சென்ட் பரப்பளவில் நில மூடாக்கு முறையில் சம்பங்கி பயிரிட்டுள்ளார். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உயிர் தரும் இப்பயிரின் மகத்துவம் குறித்து கலைசெல்வன் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு 150 கிலோ நில மூடாக்கு சீட் வேண்டும். இந்த சீட் கிலோ 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை செலவாகும். நீளப்பாய் போன்று இருக்கும் இதன் நடுவில் துளையிட்டு சம்பங்கி கிழங்கு நடவேண்டும். ஏக்கருக்கு 800 - 900 கிலோ கிழங்கு தேவைப்படும்.சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் 16 அடி இடைவெளியில் 'ஸ்பிரிங்ளர்' முறையில் தண்ணீரை தெளிக்கலாம்.15 நாட்களில் முளை வந்து விடும். 65 முதல் 90 நாட்களில் பூ வர ஆரம்பிக்கும். ஏக்கருக்குஅதிகபட்சமாக 60 கிலோ பூக்கள் கிடைக்கும். சூழ்நிலையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். 5 மாதங்களுக்கு பிறகு பூக்கள் தினமும் கிடைக்கும். காலை வேளையில் மார்க்கெட்டிற்கு பூ அனுப்புவது நல்லது.அதிகாலை 4:00 மணிக்கு பூ எடுக்கலாம். காலையில் பூக்கும் பூ வெள்ளையாக பளிச்சென்று இருக்கும். பூக்களை பறித்து தண்ணீரில் லேசாக நனைத்து கட்டி வைத்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு அனுப்புவேன். ஒரு நபர் ஒரு மணிநேரத்தில் 10 கிலோ பூக்கள் பறிக்கலாம். வைகாசி, ஆனியில் கிலோ 500 ரூபாய் வரை விலை கிடைக்கும். சீசன் இல்லாத நேரத்தில் கிலோ 20 ரூபாய் தான். ஆண்டுக்கு 52 முகூர்த்தங்கள் மூலம் லாபம் இருப்பதால், ஏக்கருக்கு சராசரியாக 2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். என்றார். 
தொடர்புக்கு: 97877 87432
எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை.

Source : Dinamalar

மண் பரிசோதனை செய்வது எப்படி: தோட்டக்கலை அலுவலகம் விளக்கம்

மண் பரிசோதனை மூலம் விவசாயம் செய்தால் அதிக மகசூல் பெறலாம். இதற்கு முன் பரிசோதனைக்காக மண்ணை எவ்வாறு சேகரிப்பது என, தோடக்கலை துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். தோட்டக் கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மண் பரிசோதனை மட்டுமின்றி, தண்ணீர் பரிசோதனையும் அவசியமாகும். மண் பரிசோதனை செய்வதற்கு எப்படி மண் சேகரிக்க வேண்டும் என்பது முக்கியமாகும். மண்ணை தொடர்ந்து பயன்படுத்தி அதில் உள்ள பயன்களை அனுபவிக்க வேண்டும் என்றால், மண்ணை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தி, பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்றவாறு விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.

சாகுபடி செய்வதற்கு முன்னர் நாம் சாகுபடி செய்யும் நிலத்தின் மண்ணில் உள்ள சத்துக்கள், குறைபாடு உள்ள சத்துக்கள் எவை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ரசாயன உரங்கள், குப்பை, பூச்சிக்கொல்லி மருந்துகள் இடப்பட்ட இடங்களில் மண் மாதிரிகள் எடுக்க கூடாது.
மேலும் வரப்பு, கிணறு பகுதி, நீர்வடியும் பகுதி மற்றும் நிரந்தரமாக நிழல்படும் இடங்களிலும் மண் மாதிரிகள் எடுக்க கூடாது. நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரி எடுக்கலாம். 'வி' வடிவத்தில் வெட்டி உட்புற மண்ணை எடுக்காமல் இருபக்கமும் சுரண்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 முதல் 7 இடங்களில் மண் மாதிரி எடுக்கலாம்.சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை நிழலில் உலர்த்தி அரை கிலோ மண்ணை ஆய்வகத்திற்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் மாவட்ட மண் பரிசோதனை மையத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு, உங்களின் நிலத்தின் தன்மை குறித்த விரிவான தகவல்களை அளிப்பர். அதற்கு ஏற்றவாறு சாகுபடி முறை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தலாம். இதனால் கூடுதல் மகசூல், நோய் தாக்காமல் இருக்கும், என்றார்.

Source : Dinamalar

Friday, July 21, 2017

நிழல் வலை கூடாரம்


நிழல் வலை கூடாரமானது மரம் அல்லது இரும்பு சட்டம் மூலம் வடிவமைக்கப்பட்டு மரம், இரும்பு, துகள் துாண்களை கொண்டு கட்டப்படுகிறது. இந்த நிழல் வலை கூடாரம், பிளாஸ்டிக் வலையினை கொண்டு மூடப்படுகிறது. 
நிகழ் வலை கூடாரமானது வெளிச்சம் மற்றும் வெப்பத்தினை பாதியாக குறைப்பதன் மூலம் வளிமண்டல வெப்பத்தினை குறைத்து பயிர்களுக்கு தேவையான தட்பவெப்ப நிலையை தருவதன் மூலம் காய்கறிப் பயிர்களை இடை பருவத்திலும் மற்றும் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
நிழல் வலைகள் வளி மண்டல வெளிச்சத்தினை பாதியாக குறைத்து, நிழல் வலை கூடாரம் முழுவதும் சமமாக பகிர்ந்தளிக்கிறது. ஒவ்வொரு தாவரத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் நிழல் மற்றும் வெப்பம் தேவைப்படுகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக நிழல் வலைக்கூடாரம் செயல்படுவதால், இவை வரவேற்பை பெற்றுள்ளது. 
பயிர்களுக்கு தகுந்த வளர் ஊடகத்தினை உருவாக்குவதற்கு சரியான விகிதத்தில் நிழல் வலைகளை தேர்வு செய்வதன் மூலம் பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் தரத்தினை மேம்படுத்தலாம். 
நிழல் வலை கூடாரத்தினால் பயிர்களின் ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் மேம்படுத்தப்படுகிறது. மேலும் மண், காற்று மற்றும் பயிர் இலைகளின் வெப்பநிலை குறைத்து மிதமான அளவுகளில் கிடைக்கப்பெறுவதால் பயிர்களின் வளர்ச்சி துாண்டப்பட்டு உற்பத்தித்திறன் மேம்படுத்தப்படுகிறது.
டி.யுவராஜ் வேளாண் பொறியாளர்
உடுமலை. 94865 85997


Source : Dinamalar

Thursday, July 20, 2017

பயிர்களை காக்கும் பூச்சிகள்

பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பயிர்களை பாதுகாக்கும் பூச்சிகளை பயன்படுத்தி, அழிக்கும் பூச்சிகளை ஒழிக்க வேண்டும். பூச்சிகளை தாக்கும் தன்மைக்கேற்ப இயற்கை எதிரிகளை ஒட்டுயிர், ஒட்டுண்ணி, இரை விழுங்கிகள் என வகைப்படுத்தலாம்.

ஒட்டுயிர்
வேறு ஒரு உயிரை சார்ந்து வாழ்வது. தங்கியிருக்கும் இடத்திற்கு தீங்கு விளைவிக்காமல் தனது நிலைப்பு தன்மைக்காக மற்ற உயிரினத்தை சார்ந்திருக்கும்.

ஓட்டுண்ணி
வேறு ஒரு உயிரினத்தை சார்ந்து வாழ்வது. தான் சார்ந்த இனத்தை அழித்து வாழும். 

இரை விழுங்கி
வேறு ஒரு உயிரை வேட்டையாடி உண்பவை இரை விழுங்கிகள்.

காண்டாமிருக நாவாய்ப்பூச்சி
சோயா பீன்ஸ், நிலக்கடலை, தட்டைப்பயிறு, பருத்தி, ஆமணக்கு, நெல், முட்டைக்கோஸ், வெண்டை, எலுமிச்சை, கரும்பு போன்ற பணப்பயிர்களை தாக்கும் பூச்சிகளை தனது விஷத்தன்மை கொண்ட எச்சிலை உட்செலுத்தி உடனுக்குடன் கொன்று விடும்.

பைரைட் வண்டு
இது தத்துப்பூச்சிகள், திரிப்ஸ், சிறிய கம்பளிப் புழுக்கள், இலை தின்னும் பூச்சிகளை விழுங்கும். தனது ஊசி போன்ற கொடுக்குகளால் பூச்சிகளை தாக்கி கொல்லும்.

பாலிடாக்ஸ் வண்டு
இவை அழிவு நாவாய்ப் பூச்சி என அழைக்கப்படுகிறது. இவை தங்களை விட அளவில் பெரிய இரையை தாக்கி ஊசி போன்ற தமது வாய் உறுப்புகளில் உள்ள நச்சை உட்செலுத்தி கொல்லும்.

ரிப்பிள் வண்டு
இவை நீர் நிலைகளில் காணப்படும், குளங்கள், நெல் வயல்கள், குட்டைகளில் தென்படும். கொசுக்கள் இதன் உணவு.

கிரீன் மிட்ரிட் வண்டு
இவை நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழித்து, அவற்றின் பெருக்கத்தை நிறுத்தும். நாள் ஒன்றுக்கு நெற் பயிர் அழிப்பானின் 10 முட்டைகள் அல்லது இரண்டு முதிர்ந்த பூச்சிகளை உண்ணும்.

பிரேயிங் மேண்டிட்ஸ் 
இடத்திற்கு ஏற்ப வண்ணங்களை மாற்றி கொள்ளும். தன் முன் கிடைக்கும் அனைத்து பூச்சிகளையும் உண்ணும். பகலில் மட்டும் வேட்டையாடும்.
இவ்வாறு பயிர் காக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பயிரில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
ந. ஜெயராஜ் 
துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.


Source : Dinamalar

Tuesday, July 18, 2017

விவசாயத்துக்குத் திரும்புகிறது மூன்றாம் தலைமுறை: வேளாண் பல்கலை. துணைவேந்தர் பெருமிதம்

farmer1

தமிழகத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களும், வேளாண் தொழிலையே தெரிந்திருக்காத புதியவர்களும் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் 2017 என்ற பெயரிலான 17- ஆவது வேளாண் வணிகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கண்காட்சியின் தொடக்க விழாவில் துணைவேந்தர் கு.ராமசாமி பேசியதாவது:
விவசாயம் லாபம் ஈட்டும் தொழிலாகவும், நமது அடிப்படையான தொழிலாகவும் இருப்பதை உணர்ந்த மூன்றாவது தலைமுறையினர் தற்போது விவசாயத்துக்கு மீண்டும் திரும்பி வருகின்றனர். அவர்களுடன், விவசாயம் பற்றித் தெரியாத மற்றொரு தலைமுறையும் ஆர்வத்துடன் வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
ஒரு காலத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 2,500 இடங்களுக்கு வெறும் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது 2,800 இடங்களுக்கு 53 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. இளைய தலைமுறையினர் விழித்துக் கொண்டிருப்பதையே இவை காட்டுகின்றன என்றார் அவர்.
உணவு உற்பத்தியில் சாதிக்கும் தமிழகம்: நிகழ்ச்சியில் வேளாண் வணிக ஆணையர் சுன்னோங்கம் ஜடாக் சிரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, அண்மைக்கால விவசாயம் காலநிலை மாற்றம், தொழிலாளர் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, போதிய விலை கிடைக்காதது போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சவால்களை எதிர்கொண்டு தமிழக விவசாயிகள் சாதித்து வருகின்றனர். 2010- 11- ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 43 சதவீதம் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1.13 கோடி டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இறைச்சிக்கும் சான்றிதழ்: கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.திலகர் பேசும்போது, உற்பத்தியாளர்களாக இருக்கும் விவசாயிகள், தங்களது விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதை அறிந்து கொண்டால் அதிக லாபம் ஈட்ட முடியும்.
Source : Dinamani