Monday, August 31, 2015

கொடைக்கானல் பகுதியில் பசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு


திண்டுக்கல்,
கொடைக்கானல் பகுதியில் பசுமை குடில் மூலம் காய்கறிகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பசுமை குடில்
விவசாயத்தில் மகசூலை அதிகரிக்க பல்வேறு புதுமையான சாகுபடி முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் பசுமை குடில் முறை. இந்த முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அதில் பசுமை குடில் அமைக்கப்படுகிறது. பின்பு, அங்கு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியை மட்டுமே பசுமை குடில் கிரகித்து கொண்டு வழங்குகிறது. இதனால், பயிர்கள் செழித்து வளர்வதோடு, அதிக மகசூலும் கிடைக்கிறது. இந்த முறையில் விவசாயிகளுக்கு தண்ணீர் மிச்சமாவதோடு, இடுபொருட்கள் தேவையும் வெகுவாக குறைகிறது.
திண்டுக்கல்லை பொறுத்தவரை வெள்ளரி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இதே போல், கொடைக்கானல் பகுதியில் காய்கறிகள் மற்றும் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கு, அரசு மானியம் வழங்குகிறது.
3 மடங்கு உற்பத்தி
அதன்படி கொடைக்கானல் பகுதியில் 50 ஆயிரம் சதுர அடியில் பசுமை குடில் அமைக்க அரசு மானியம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. அதன் படி ஒரு விவசாயி குறைந்த பட்சம் ஆயிரம் சதுர அடி முதல் 4 ஆயிரம் சதுர அடிவரை பசுமை குடில் அமைக்க மானியம் பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் சுமார் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கிஷோர் கூறும்போது, ‘கொடைக்கானல் பகுதியை பொறுத்தவரை பட்டர் பீன்ஸ், முருங்கை பீன்ஸ், கொடித்தக்காளி உள்ளிட்டவை பசுமை குடில் மூலம் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த முறையில் 3 மடங்கு அதிகமான மகசூலை விவசாயிகள் பெற முடியும். இதற்கு மானியம் பெற விவசாயிகள் முறையாக விண்ணப்பித்து பயன்பெறலாம்என்றார்.


No comments:

Post a Comment