Monday, August 31, 2015

ருசி நிறைந்த கோவைக்காய் உணவுகள்



கோவைக்காய், கொடிகளில் காய்க்கும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளரும்தன்மை கொண்டது. இது மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டதாக வளரும். இதன் இலை, காய் பழம், வேர் போன்ற  அனைத்திலும் மருத்துவ குணம் இருக்கிறது.

இந்தியாவில் பழங்குடி மக்கள் அதிகமாக கோவைக்காயை மருத்துவத்தில் பயன்படுத்தியதாக ஆவணங்கள் கூறுகின்றன. இது சர்க்கரை நோய்க்கு மிக முக்கியமான மருந்தாக திகழ்கிறது. இதன் இலை, காயில் உள்ள குளுக்கோஸ் 6 பாஸ்பேட் என்ற என்சைம் கல்லீரலில் செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

சர்க்கரை நோயாளிகள் கோவைக்காயை வாரம் இருமுறை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதன் இலை உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியதுதோல் நோய்களுக்கு சிறந்த மருந்து. இலையை அரைத்து சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய் உள்ளவர்கள் பூசிக்குளிக்கலாம். சொரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் இந்த இலையின் சாறை எடுத்து  வெண்ணெய்யில் கலந்து பூசலாம். காய்ச்சல் உள்ளவர்கள் கோவை இலை சாற்றை உடலில் பூசும் வழக்கம் பழங்குடி மக்களிடம் காணப்படுகிறது. வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை போக்க, கோவைக்காய் இலை சாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு பருகவேண்டும்.

வயிற்றுப் போக்கு ஏற்படும்போது இதன் சாறை இரண்டு தேக்கரண்டி மோரில் கலந்து பருகவேண்டும்.

பூச்சிகடித்தால் அந்த இடத்தில் இந்த சாறை தேய்க்கலாம்.

உடலில் ஏற்படும் மூட்டு வீக்கம் மற்றும் அடிப்பட்ட வீக்கங்களுக்கு கோவை இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டவேண்டும். வீக்கங்கள் குறைந்துவிடும்.

கோவைக்காயை பற்றிய சித்த மருத்துவ பாடல் இது:

‘‘
வாயின் அரோசகம் போம் மாறா அழலையறும் 
நோயிற் கபமகலும் நுண்ணிடையேதூயவதன் 
வற்றற் கருசி மருவு கரப்பான் போகுஞ் 
சுத்தக்கோவைக் காயைச் சொல்’’

இதன் பொருள்: கோவைக்காயை சாப்பிட்டால் சுவையின்மை, பசியின்மை, உடல் சூடு போன்றவை நீங்கும். அதிகரித்த கபம் மற்றும் தோல் நோய்கள் நீங்கும்! 

கோவைக்காயில் பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

கோவைப்பழம் வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும். பழத்தை மென்று வாய்கொப்பளித்தால் போதுமானது.

கோவைக்காய் கொடியின் வேர் 20 கிராம் எடுத்து, 200 மி.லி. நீரில் கொதிக்கவைத்து குடித்தால் நீர்கட்டு நீங்கும். பித்தம் அதிகரிப்பதால் மூட்டுகளில் உண்டாகும் குத்தல் மற்றும் வீக்கத்திற்கும் இந்த நீரை பருகலாம். 

கோவைக்காய் அதிகம் கிடைக்கும் காலங்களில் அதை வெட்டி சிறிது உப்பு மஞ்சள்தூள் கலந்து அரை வேக்காடு வேக வைத்து  வெயிலில் காய வைத்து வற்றலாக்கி தேவைக்கு பயன்படுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கோவைக்காய் சிறந்த மருத்துவ உணவு. அதனால் வாரத்தில் இரண்டு நாட்களாவது அதை உணவில் சேருங்கள்.

துவையல்

கோவைக்காய் – 200 கிராம் (நறுக்கவும்)

தேங்காய் துருவல்தேவைக்கு

பெரிய வெங்காயம் – 1 (நறுக்கவும்)

பூண்டு – 4 பற்கள் 

பச்சைமிளகாய் – 3

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 2

புளிசிறிய எலுமிச்சை பழ அளவு

உப்புதேவைக்கு

நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கோவைக்காயை நன்கு வதக்கவும். வெந்து வரும்போது நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் போன்றவைகளை கலந்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்குங்கள்

மறுபடியும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவைகளை சேர்த்து வதக்குங்கள். இதனை மிக்ஸியில் இட்டு பொடித்து, அத்துடன் ஆறவைத்துள்ள கோவைக்காய், தேங்காய் துருவலை கலந்து, உப்பும் சேர்த்து அரையுங்கள்.

இதை சூடான சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு சுவையாக சாப்பிடலாம்

அவியல்

கோவைக்காய் – 500 கிராம் 

தேங்காய் – ½ மூடி (துருவிக் கொள்ளுங்கள்)

பச்சைமிளகாய் – 3

சீரகம் – 2 தேக்கரண்டி

தயிர் – 100 மி.லி

உப்புதேவைக்கு

தாளிக்க:

கடுகு – 1 தேக்கரண்டி    

தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

கறிவேப்பிலைசிறிதளவு

செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி, சிறிது நீர் கலந்து வேகவைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சைமிளகாயை அரைத்து வெந்து கொண்டிருக்கும் கோவைக்காயுடன் கலந்து, நன்கு கிளறவும். அத்துடன் தயிர், உப்பு கலந்து அடுப்பை அணைத்து விடவும். தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து அதில் கலந்திடவும்.

இதை சூடான சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

சாதம்

கோவைக்காய் – 200 கிராம் (நீளமாக நறுக்கவும்)

பச்சரிசி – 200 கிராம் (வேகவைக்கவும்)

வேர்கடலை – 50 கிராம் (பொடித்துக்  கொள்ளவும்)

உப்புதேவைக்கு

வறுத்து அரைக்க:

கடலைபருப்பு – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 4

தாளிக்க:

கடுகு – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலைசிறிதளவு

நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு, கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய் போன்றவைகளை கொட்டி வறுத்து அரையுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கோவைக்காயை கொட்டி வேகும் வரை சிறிது நீர் தெளித்து வதக்கிக்கொண்டே இருக்கவும். வெந்து வரும்போது வறுத்து அரைத்துள்ள பொடி, பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை, உப்பு, சாதம் ஆகியவற்றை கலந்து கிளறுங்கள். பின்பு தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து அதில் சேர்த்து சாப்பிடலாம்.

வறுவல்

கோவைக்காய் – 500 கிராம் 

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

அரிசி மாவு – 50 கிராம்    

கடலைமாவு – 100 கிராம்

உப்புதேவைக்கு

எண்ணெய்பொரிப்பதற்கு

செய்முறை: கோவைக்காயை மெலிதாக, நீளமாக நறுக்குங்கள். அதில் மிளகாய்தூள், உப்பு அரிசிமாவு, கடலைமாவு போன்றவைகளை கலந்து சூடான எண்ணெய்யில் பொரித்து சுவையுங்கள்.




No comments:

Post a Comment