Sunday, September 27, 2015

நிகழாண்டில் 5,107 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் :



திருச்சி மாவட்டத்தில் 2015-16-ம் நிதியாண்டில் 5,107 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர்  சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற, விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:
இத்திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 325 ஊராட்சிகளில் ரூ. 26.5 கோடியில், 20,776 பயனாளிகளுக்கு 83,604 விலையில்லா வெள்ளாடுகளும், ரூ. 5.53 கோடியில் 1,600 விலையில்லா பசுக்களும் வழங்கப்பட்டுள்ளன.
நிகழாண்டில் திருச்சி மாவட்டத்தில் ரூ. 6.74 கோடியில் 5,107 பயனாளிகளுக்கு 20,428 விலையில்லா வெள்ளாடுகளும், ரூ. 54 லட்சத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா பசுக்களும் வழங்கத் திட்டமிடப்பட்டு, இதுவரை 22 கிராம ஊராட்சிகளில் 1.67 கோடியில் 1,288 பயனாளிகளுக்கு 5,152 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
முன்னதாக, திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 4 ஊராட்சிகளைச் சேர்ந்த 147 பயனாளிகளுக்கும், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 6 ஊராட்சிகளைச் சேர்ந்த 272 பயனாளிகளுக்கும், மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 278 பயனாளிகளுக்கும், துறையூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 422 பயனாளிகளுக்கும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.
ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமை வகித்தார். அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரெத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திரசேகர் (மணப்பாறை), இந்திரா காந்தி (துறையூர்), சி. வளர்மதி (ஸ்ரீரங்கம்), மாவட்ட ஊராட்சித் தலைவர் டி. ராஜாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source : Dhinamani


No comments:

Post a Comment