Tuesday, September 29, 2015

நெய்வேலியில் ரூ.75 கோடி செலவில் சூரியஒளி மின் நிலையம்



நெய்வேலி
நெய்வேலியில் ரூ.75 கோடி செலவில் சூரியஒளி மின்நிலையத்தை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் தொடங்கி வைத்தார்.
என்.எல்.சி. நிறுவனம் தற்போது பழுப்பு நிலக்கரியில் இயங்கும் மின்நிலையங்கள் மட்டுமல்லாது, நிலக்கரியின் மூலம் செயல்படும் அனல்மின் நிலையங்கள், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையான, காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின் சக்தி உற்பத்தி செய்யும் மின் நிலையங்களை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பசுமை மின் நிலையம்
அந்தவகையில், நெய்வேலியில் 10 மெகாவாட் திறன்கொண்ட, சூரிய ஒளி ஆற்றல் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யும் மின் நிலையத்தை நெய்வேலியில் அமைத்துள்ளது. ரூ. 74 கோடியே 60 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறை சார்ந்த மின் நிலையம், என்.எல்.சி. நிறுவனத்தால் முதல் முறையாக அமைக்கப்பட்ட பசுமை மின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நேற்று என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் தொடங்கி வைத்தார்.
48 ஆயிரம் சூரிய ஒளி தகடுகள்
54 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இம்மின் நிலையத்தில், ஒவ்வொன்றும் தலா 240 வாட் மின்சக்தி உற்பத்தி செய்யும் 48 ஆயிரம் சூரிய ஒளியைக் கிரகிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகடுகள் மூலம் சேகரிக்கப்படும் ஒளி ஆற்றலானது நேர்மின்னோட்ட மின்சக்தியாக மாற்றப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரமானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், முதல் ஆண்டில் 1 கோடியே 64 லட்சம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக மட்டும், இதுவரை சுமார் 8 லட்சத்து, 60 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், கழுநீர்க்குளம் என்றக் கிராமத்தில் 51 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையத்தை என்.எல்.சி. அமைத்துவருகிறது.
தேசிய சூரிய மின்சக்தி திட்டம்
பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசு தேசிய சூரிய மின் சக்தித்திட்டம் ஒன்றை உருவாக்கி, 2022ம் ஆண்டிற்குள் 1 லட்சம் மெகாவாட் மின்சக்தியை சூரியஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தில், என்.எல்.சி. நிறுவனம் தன்னையும் இணைத்துக் கொண்டு, 4 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்கத்திட்டமிட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக, நெய்வேலியில் கூடுதலாக 130 மெகாவாட் சூரியஒளி மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் ரூ. 167 கோடியே 29 லட்சம் செலவில் 25 மெகாவாட் சூரிய மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்களின் மூலம் என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தி அளவு பலமடங்கு அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலைப் பாதிக்காத புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையிலும் இந்நிறுவனம் நாட்டின் முன்னோடியாகத் திகழ உள்ளது.
கலந்து கொண்டவர்கள்
இவ்விழாவில் என்.எல்.சி. இயக்குனர்கள் சரத்குமார் ஆச்சார்யா, ராக்கேஷ்குமார், பூபதி, தங்கபாண்டியன், என்.எல்.சி. முன்னாள் மின்துறை இயக்குனர் ராஜகோபால், கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி ஷிவ்ராஜ்சிங், என்.எல்.சி. மின்துறை செயல் இயக்குனர் சுரேஷ்பாபு, நெய்வேலி புதிய அனல்மின் நிலைய செயல் இயக்குனர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


 

No comments:

Post a Comment