Tuesday, September 29, 2015

மழைநீர் சேகரிப்பின் மகத்துவம்



விண்ணில் இருந்து மண்ணில் விழும் உயிர்நீர் மழைநீர். பூமியில் உயிரினங்கள் வாழவும், மண்வளம் செழிக்கவும் இயற்கை வழங்கும் கருணைக்கொடை.
 
எல்லா பொருள்களுக்கும் மாற்றுப் பொருள் உண்டு. மின்சார உற்பத்திக்கு அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், அணு மின் நிலையம் என பல வழிகள் உண்டு. ஆனால், தண்ணீர் உற்பத்திக்கு மழை மட்டுமே ஆதாரம். 
 
மழை பெய்தால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அணைகள், ஏரி - குளங்களில் நீர் பெருகும். எனவே, எதிர்காலத் தேவைக்கு நாம் பணத்தை சேமித்து வைப்பதுபோல், வருங்கால சந்ததியினர் உயிர்வாழ மழைநீர் சேகரிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
 
பெருகிவரும் மக்கள் தொகையால் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், பருவநிலை மாற்றம், ஓசோன் படலம் பாதிப்பால் புவி வெப்பமாதல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் அளவுக்கு அதிகமாக நிலத்திலிருந்து நீர் உறிஞ்சப்படுதல் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 
 
இந்நிலை நீடித்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, உயிர்கள் மடியும் அபாயம் உருவாகும் என நாஸô விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் உலகில் மக்கள் அதிகம் வாழும் நிலப் பரப்புகளில் முக்கியமான 37 பெரிய நிலப்பரப்புகளை ஆய்வு செய்ததில் நிலத்தடி நீர்மட்டத்தில் 13 நிலப்பரப்புகள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளன என்றும் இதில் இந்தியாவில் உள்ள சிந்து நிலத்தடி நீர்ப்பரப்பு, குறைந்துவரும் வேகத்தில் 2-ஆவது இடத்தில் உள்ளதாகவும் நீரியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
உலகில் 16 சதவீதம் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் நீர் வளம் வெறும் நான்கு சதவீதம் மட்டுமே. இந்நிலையில், நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்துவருவது அபாயகரமானது என நீர்வள நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரில் குளோரைடு, ஃபுளோரைடு, நைட்ரேட் போன்ற ரசாயனங்கள் வரையறுக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக உள்ளதாகவும், நிலத்திலிருந்து அதிகமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதே இதற்கு காரணம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்ததாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு நிலவரப்படி நிலத்தடி நீர்வளத்தில் 77 சதவீதம் குறைந்துவிட்டதாக மத்திய நீர் வாரியம் அதிர்ச்சித் தகவலை அண்மையில் வெளியிட்டது. இந்நிலை தொடர்ந்தால் வருகிற 2020-ஆம் ஆண்டு கடல்நீர் நிலப்பரப்புக்குள் புகும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இதற்கிடையே, மனை வணிகத்தின் ஆதிக்கத்தால் தமிழகத்தில் ஏறக்குறைய 45 சதவீத குளங்கள் மாயமாகிவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையைக் கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி முக்கிய தீர்ப்பு ஒன்று வழங்கியது. 
 
அந்தத் தீர்ப்பில், குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அமைந்துள்ள இடங்களில் வீடுகளோ, பிற கட்டடங்களோ கட்ட எக்காரணம் கொண்டும் அரசு அனுமதிக்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தது.
 
ஆனால், தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையங்கள், பல்வேறு துறைகளின் கட்டடங்களில் பெரும்பாலானவை நீர் நிலைகளிலோ அல்லது நீர்நிலை அருகிலோ கட்டப்பட்டுள்ளன. 
 
மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவை நீர்நிலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 
 
கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு ரயிலில் பயணிக்கும்போது, இருபுறமும் ஆங்காங்கே தண்ணீர் நிரம்பிக் காணப்படும் நீர்நிலைகளும், பச்சைப்பசேல் என ரம்மியமாகக் காணப்படும் வயல்வெளிகளும் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருக்கும். 
 
நீர்நிலைகளுடனும், பயிர்களுடனும் உறவாடி வீசும் காற்று, நம்மை தழுவும்போது புத்துணர்ச்சி ஏற்படும். பயணக் களைப்பு தெரியாது. இதனால், ரயில் பயணம் என்றாலே மனது குதூகலிக்கும். 
 
ஆனால் தற்போதோ, சாதாரண வகுப்பில் ரயில் பயணம் என்றாலே உடல் உபாதையை விலை கொடுத்து வாங்குவதாக உள்ளது. ரயில் பாதையின் இருபுறமும் காணப்பட்ட நீர்நிலைகள் வறண்டும், ஆக்கிரமிப்பாலும் முகவரி இழந்து முகாரி ராகம் பாடுகிறது.
 
காற்றில் சலசலக்கும் நெல்கதிர்களைச் சுமந்து நின்ற நெல் வயல்கள் இன்று கல் வயலாக கான்கிரீட் கட்டடங்களை சுமந்து நிற்கின்றன. இந்நிலை நீடித்தால், இயற்கையின் கொடையான மழை நீரை சேமிக்க முடியாமல், கடுமையான வறட்சி ஏற்பட்டு, உயிர்களின் சுழற்சியில் பாதிப்பு உண்டாகி, வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். 
 
எனவே, மழை நீரை உயிர்நீராகக் கருதி அதைச் சேமிக்க வேண்டும். இதற்கு மழை நீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக்க அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும். 
 
மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை மாணவ - மாணவிகள் புரிந்துகொள்ளும் வகையில் பள்ளிப் பாடத் திட்டத்தில் மழைநீர் சேகரிப்பை கட்டாயப் பாடமாக்கவேண்டும். 
 
ஆன்மிகம், இலக்கியம், அரசியல் என அனைத்து தரப்பு கூட்டங்களிலும் மழை நீரைச் சேமிப்போம் என உறுதிமொழி எடுக்க வேண்டும். உள்ளங்கையில் உலகை அடக்கும் வகையில் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்தாலும், உயிர்வாழ உணவு அவசியம். அந்த உணவை உற்பத்தி செய்ய தண்ணீர் முக்கியம். 
 
எனவே, "நீரின்றி அமையாது உலகு' என்னும் வள்ளுவர் வாக்கை நெஞ்சில் நிறுத்தி, இந்தப் பூமியை, எதிர்கால நமது சந்ததியினரைக் காக்க மழைநீர் சேகரிப்பை தலையாயக் கடமையாகக் கடைபிடிப்போம்.

No comments:

Post a Comment