Monday, September 28, 2015

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழங்கள் :



உத்தமபாளையம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து அதிக அளவில் வாழைப்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வரவேற்பு உள்ளது
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் இருபோக நெல் விவசாயம் நடைபெறுகிறது. அத்துடன் மறைமுக பாசனம் மூலம் திராட்சை, தென்னை, வாழை ஆகியவையும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
கம்பம் பள்ளதாக்கு பகுதிகளான காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, க,புதுப்பட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட ஊர்களில் வாழை விவசாயத்திற்கு ஏற்ற மண் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வாழை தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன.
இங்கு விளையும் வாழை தார்கள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி வாழை தார்களுக்கு சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. இதனால் வியாபாரிகள் ஆர்வத்துடன் இங்கிருந்து அவற்றை வாங்கி செல்கின்றனர்.
காட்டு பன்றிகள்
இந்த பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வாழைப்பழங்களை பிரித்தெடுத்து தண்ணீரில் நனைத்து பெட்டிகளில் அடுக்குகிறார்கள். பின்னர் இந்த பெட்டிகள் குளிர்சாதன லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவை சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:–
வாழை விவசாயத்தில் மகசூல் எடுக்க குறைந்தது 8 மாதங்கள் ஆகும். வாழைத்தார்களை வெட்டியதுடன், அந்த மரங்களும் வெட்டப்படும். பின்னர் அதன் அருகே உள்ள பக்க கன்றுகள் வளர்ச்சி அடைந்து பலன் தரும். ஆனால் வாழைத்தார்களை அறுவடை செய்யும் முன்பாக தோட்டங்களுக்குள் காட்டுபன்றிகள் அடிக்கடி புகுந்து நாசம் செய்து விடுகின்றன. இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment