Tuesday, October 27, 2015

தேங்காய் வியாபாரத்தில் சாதிக்கும் 'மாஜி' பேராசிரியர்!


எந்த வேலையும் சிறந்த வேலை தான்; படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காவிட்டால், சாதாரண வேலையைக் கூட, சிறப்பாக செய்து வாழ்வில் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார், முன்னாள் கல்லுாரி பேராசிரியர், சிவப்பிரகாஷ், 32. ஆவடியை சேர்ந்த சிவப்பிரகாஷுக்கு பூர்வீகம் பொள்ளாச்சி. பிளஸ் 2 வகுப்பு முடித்து, கல்லுாரியில் சேர வேண்டிய நேரம். அவரது தாய் மாலதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. 
அதனால், தந்தை ஜெயராஜ், தனது வேலையை விட்டுவிட்டு, மாலதி அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டியதாகி விட்டது. குடும்பத்தை வறுமை சூழ்ந்தது.கல்லுாரி கனவுக்கு முழுக்குப் போட்ட சிவப்பிரகாஷ், குடும்பத்தை கரையேற்ற வேலைக்கு சென்றார். இடையே, தன் தாய் நகைகளை விற்று, கோவையில் பட்டயப் படிப்பு முடித்தார். அப்போதே பகுதிநேர வேலைக்கும் சென்றார்.

நஷ்டம் தான் மிச்சம்:



பின், சென்னையில், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இரு ஆண்டுகள் இப்படியே ஓடிவிட, பொறியியல் படிக்க வேண்டும் என்ற தனது கனவினை செயல்படுத்த முடிவெடுத்தார். வேலையை விட்டுவிட்டு, ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் சேர்ந்தார். நண்பரின் உதவியுடன் படிப்பை முடித்த சிவப்பிரகாஷுக்கு, நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. அப்போது தான் அவர் முடிவெடுத்தார்... இயந்திர வாழ்க்கை வேண்டாம் என்று. தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட விரும்பினார்.

பொறியியல் படித்து விட்டு, தேங்காய் வியாபாரமா என, குடும்பத்தில் கடும் எதிர்ப்பு. ஆனால், நம்பிக்கையுடன், சிறிய அளவில் ஆவடியில், பொள்ளாச்சி தேங்காய் வியாபாரத்தை துவக்கினார். முதல் இரு ஆண்டுகளில் நஷ்டம் தான் மிச்சம். மீண்டும் முதலீட்டுக்கு, பணம் தேவைப்பட்டது.அதனால், சிவப்பிரகாஷ், ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அதிகாலை, 4:00 முதல் காலை, 8:00 மணி வரை தேங்காய் வியாபாரம். பின், பேராசிரியர் பணி. மீண்டும் மாலை 5:00 முதல் 9:00 மணி வரை தேங்காய் வியாபாரம். சிறிது சிறிதாக நஷ்டத்தில் இருந்து சிவப்பிரகாஷ் மீண்டார். விலை அதிகமாக இருந்தாலும், தேங்காயின் தரம் வென்றது; வியாபாரம் சூடுபிடித்தது.

பேராசிரியர் பணியை விட்டுவிட்டு, தற்போது முழுநேர தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது, அவரது கடையில், இன்னொரு பொறியியல் பட்டதாரியும் வேலை செய்து வருகிறார். கடை ஊழியர்களுக்கு புதிய கடையினை துவக்கி கொடுத்து, அவர்களையும் ஊக்குவிக்கிறார், சிவப்பிரகாஷ். 
பிறருக்கு உதவி செய்ய முடியும்:



இதுகுறித்து, சிவப்பிரகாஷ் கூறியதாவது: துவக்கத்தில் அனைவரும் கிண்டல் செய்தனர். ஆனால், நான் விடாப்பிடியாக இந்த தொழிலை செய்து வந்தேன். பல்வேறு கஷ்டங்களுக்கு பின் தற்போது, இந்தப் பகுதியில் எனது கடை தேங்காய் என்றால் தரமானது என்ற பெயர் கிடைத்துள்ளது. அது தான் என் வியாபாரத்திற்கு முதலீடு. ஒரு நிறுவனத்தில், குறிப்பிட்ட சம்பளத்துடன் வேலை செய்யும் என்னால், பிறருக்கு ஒரு சிறிய அளவில் தான், உதவி செய்ய முடியும். ஆனால், தொழில் செய்யும் போது, என்னால் அதிக அளவு பிறருக்கு உதவி செய்ய முடியும்.நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடிகிறது. அதனால் அவர்களின் குடும்பம் நன்றாக இருக்கிறது.படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரிகள், தொழில் முனைவோராக மாறி, முதலாளி ஆகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தொடர்பு எண்: 9894290022



No comments:

Post a Comment