Friday, October 30, 2015

செஞ்சேரியில் கொப்பரை கொள்முதல் மையம் தொடக்கம்



பல்லடம் அருகே செஞ்சேரி கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கித் தலைவர்கள் வதம்பச்சேரி பி.கந்தசாமி, சூலூர் லிங்கசாமி, பாபு என்ற ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொப்பரை கொள்முதல் மையத்தை கோவை மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.கனகராஜ் தொடக்கி வைத்துப் பேசினார்.
இதில், டெல்லி இப்கோ அறக்கட்டளை உறுப்பினர் .வி.ஆர்.ராமசந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் திருமலைசாமி, வட்டார அட்மா தலைவர் எஸ்.பி.ராமசாமி, தென்னை விவசாயி மோகன்மந்தராசலம், கூட்டுறவுச் சங்க மேலாண்மை இயக்குநர் திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
4 விவசாயிகள் 190 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரக் கொப்பரை ரூ. 71.50-க்கும், இரண்டாம் தரக் கொப்பரை ரூ. 70.50-க்கும், மூன்றாம் தரக் கொப்பரை ரூ. 70-க்கும் விற்பனையானது.
 மொத்தம், ரூ. 6 லட்சத்து 78 ஆயிரத்து 300-க்கு ஏலம் மூலமாக விற்பனையானது. வெளி மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு கொப்பரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் மக்களின் நுகர்வு குறைந்து விற்பனை பாதிப்படையவதால் கொப்பரைக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. கலப்படத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.கனகராஜிடம் விவசாயிகள் கூறினர்.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஊராட்சித் தலைவர் கூறினார்.
 

No comments:

Post a Comment