Friday, November 27, 2015

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உழவு எந்திரங்கள் வேளாண்மை இணை இயக்குநர் வழங்கினார்



புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உழவு எந்திரங்களை வேளாண்மை இணை இயக்குனர் சந்திரசேகரன் வழங்கினார்.

மானிய விலையில் உழவு எந்திரங்கள்

புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய வேளாண் வளர்ச்¢சி திட்டத்தில் மானிய விலையில் உழவு எந்திரங் களை(பவர்டில்லர்) அன்னவாசலை சேர்ந்த விவசாயி செல்வராஜ், அறந்தாங்கியை சேர்ந்த நித்யா ஆகியோருக்கு வேளாண்மை இணை இயக்குநர் சந்திரசேகரன் வழங்கினார். அப்போது வேளாண்மை துணை இயக்குநர்(மத்திய திட்டம்) கந்தசாமி மற்றும் வேளாண்மை அதிகாரிகள் உடன் இருந்தனர்

இது தொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் சந்திரசேகரன் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது நிலவி வரும் வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையினை போக்கிட வேளாண்மையில் எந்திர மயமாக்கல் மிகவும் அவசியமானது. இதனை கருத்தில் கொண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டு மானிய விலையில் உழவு எந்திரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் விநியோகம் செய்யப்படுகிறது. சிறு, குறு, மகளிர் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு எந்திரத்தின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.75 ஆயிரம். இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு எந்திரத்தின் அடிப்படை விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.60 ஆயிரம். இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. 

பதிவு செய்ய வேண்டும்

உழவு எந்திரங்கள் பெறுவதற்கு தேவையான தகுதியான விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் பொறியியல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் விலைப்புள்ளியினை பெற்று மானிய தொகையினை கழித்து விவசாயிகள் பங்குத் தொகைக்கான கேட்பு வரைவோலையினை விலைப்புள்ளியுடன் வழங்க வேண்டும். 

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தினை உடனடியாக தொடர்பு கொண்டு உழவு எந்திரங்களை மானியத்தில் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 




No comments:

Post a Comment