Monday, November 30, 2015

மழை மனிதர்


 ‘அய்யய்யோ இவ்வளவு மழையா!’ என்று பயப்படுகிறவர்கள் ஒருபுறம். ‘கொட்டிய மழை எல்லாம் கடலுக்கு போகிறதே!’ என்று கவலைப்படுகிறவர்கள் மறுபுறம்! இப்படிப்பட்ட இரு சாராருக்கும் மத்தியில், மழை நீரை சேமித்து மாபெரும் புரட்சியை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார், திருவாரூர் கி.வரதராஜன். வயது 70. இவர் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினீயர்.

தனது வீட்டையே ஒரு மாடலாக உருவாக்கி, 43 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேகரித்து வைத்திருக்கிறார். வருடம் முழுக்க அதையே பயன்படுத்துகிறார். இவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படாது. வீடுகள் தண்ணீருக்குள் மூழ்காது. நாட்டில் தண்ணீர் பஞ்சமும் ஏற்படாது.
 

‘‘நான் அரியலூர் அருகே உள்ள கீழப் பழுவூர் கிராமத்தை சேர்ந்தவன். அங்குதான் பூமா தேவிக்கு ஏற்பட்ட சாபம் நீங்கியதாக கூறுவார்கள். திருச்சி சேஷாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சிவில் என்ஜினீயரிங் படித்தேன். பின்பு தொழில்நுட்ப இயக்குனரகத்தில் தொழில்நுட்பப் பணி உதவியாளராக வேலை பார்த்தேன். அடுத்து பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த நான், 2002–ம் ஆண்டு மழை நீரை சேமிப்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே விருப்ப ஓய்வு பெற்றேன்.
 
வீடுகள், அலுவலகங்கள், விளை நிலங்கள் என இதுவரை 2,548 இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறேன். மழைநீர் பற்றிய ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உள்பட தென் மாநிலங்கள் முழுவதும் சென்று மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்து இருக்கிறேன்’’ 


உங்களுக்கு எப்படி இதில் ஆர்வம் வந்தது?
 

‘‘நான் பிறந்த கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே ஆலந்துறையார் கோவில் எதிரே ஒரு குளம் உள்ளது. அதற்கு ஆள் இறங்கா குளம் என்று பெயர். அந்த குளத்தின் நீரை குடிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது எங்கள் முன்னோர் வகுத்த மரபு. ஆகையால் நாங்கள் யாரும் அந்த குளத்தில் குளிக்க மாட்டோம். அசுத்தம் செய்ய மாட்டோம். குளத்தின் நீர் மண்ணின் நிறமான செந் நிறத்தில் இருக்கும். அதை ஒரு பாத்திரத்தில் நிரப்பினால், சிறிது நேரத்தில் தெளிந்த நீராக மாறும். அந்த நீரை குடித்தாலே, முழு சாப்பாடு சாப்பிட்ட உற்சாகம் பிறக்கும். அதற்கு காரணம் அந்த குளத்தில் மழை நீரை முறையாக சேகரித்தது தான்.
 

அந்த ஆள் இறங்கா குளம் தான் எனக்குள் மழை நீரை சேகரிக்கும் ஆர்வத்தை உருவாக்கியது. 15 ஆண்டுகள் பொதுப்பணித்துறையின் நீரியல் கோட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் பணிபுரிந்தேன். அப்போது கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர் மட்டத்தின் ஏற்றம், இறக்கம் எவ்வாறு இருக்கிறது? என்பதை கணக்கிடுவது எனது பணி. அது மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை எனக்கு உணர்த்தியது.

மழை நீரை சேகரித்தால் வறட்சி நேரத்திலும் குடிநீர் பஞ்சம் ஏற்படாது. வறட்சி பகுதியில் 3 பேரை கொண்ட ஒரு குடும்பம் வசிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த குடும்பத்தின் குடிநீர் தேவையை ஆயுள் முழுவதும் பூர்த்தி செய்ய, 300 சதுர அடி கொண்ட வீட்டின் மேல் கூரை போதும். அந்த மேல்கூரையில் ஆண்டுக்கு சராசரியாக 300 மில்லி மீட்டர் அளவில் மழை நீர் விழுந்தாலே, தேவைக்கு குடிநீர் கிடைத்துவிடும்.

இந்தியா முழுவதும் ஆண்டுக்கு சராசரியாக 950 மில்லி மீட்டர் மழையும், தமிழ்நாட்டில் 1050 மில்லி மீட்டர் மழையும் பெய்து வருகிறது. எனவே 300 மில்லி மீட்டர் மழை என்பது அனைத்து இடங்களிலும் பெய்யும் சாதாரண அளவை விட குறைவானதுதான்.
 
மழை நீரை சேமிப்பது பற்றி அரசுக்கு 3 யோசனைகளை ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். அவை: ஏரி, குளங்களில் மழை நீரை சேகரிப்பது. விளை நிலங்களில் மழை நீரை சேகரிப்பது. ஒரு நகரத்தில் ஒரு வார்டை தேர்வு செய்து அங்குள்ள அரசு அலுவலகங்களிலும், அரசு ஊழியர்களின் வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது. இவற்றை அரசு தீவிரமாக செயல்படுத்தினால் மழை நீர் வீணாகாது. ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான குடிநீரை தாங்களே சேமித்து வைத்து கொள்ள முடியும்’’

எந்த மண்ணில் மழை நீரை அதிகம் தேக்க முடியும்?

‘‘மணலும், வண்டல் மண்ணும் தண்ணீரை தேக்கி வைக்கும் திறன் படைத்தவை. பாறை, சுக்கான், களிமண் உள்ளிட்டவை தண்ணீரை தேக்கி வைக்காது. தண்ணீரை தேக்கி வைக்க திறன் இல்லாத மண் வகைகளே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது. எனவே தமிழ கத்தில் மழை நீர் சேமிப்பு என்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.
 

ஆயிரம் சதுர அடி மேற்கூரையில், ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் மில்லி மீட்டர் மழை பெய்தால் ஒரு லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கலாம். இந்த வழி  முறையை வீணாக கிடக்கும் புறம்போக்கு நிலத்தில் கூட செயல்படுத்த முடியும். இவ்வாறு செயல்படுத்தினால் மழை அதிகமாக பெய்வதால் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கலாம். விவசாயிகள் தங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்றாற்போல் தங்கள் விளை நிலத்தின் ஒரு பகுதியில் மழை நீரை சேகரிப்பதற்கான பசுமை குட்டைகளை உருவாக்க வேண்டும்’’

மழை நீரில் நீங்கள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்த விஷயம்?


‘‘மழை நீர் மிக தூய்மையானது. ஏற்கனவே சேகரித்து வைத்த மழை நீரை நீண்ட நாட்கள் திறந்த வெளியில் வைத்திருந்தால் அதில் பூச்சி, புழுக்கள் தோன்றும். அந்த மழை நீர் மீது மீண்டும் மழை பெய்தால் அதில் 80 சதவீத பூச்சி, புழுக்கள் அழிந்து விடும். அதே நீரில் மீண்டும் மழை பெய்தால் 100 சதவீத பூச்சி, புழுக்களும் அழிந்து விடும். இது நான் ஆராய்ந்து கண்டறிந்த உண்மை. இந்த வழிமுறையை வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பின்பற்றி மழை நீரை, குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள்’’

மழை நீரை சேகரிக்க, நீங்கள் உருவாக்கியிருக்கும் கட்டமைப்புகளை பற்றி கூறுங்கள்? 

‘‘விளைநிலம், ஆறு, ஏரி, குளம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நான் உருவாக்கி இருக்கிறேன். குடியிருப்பு கட்டிடத்தின் மேல் பகுதியில் வடிதொட்டியை அமைக்க வேண்டும். வடி தொட்டியில் இருந்து மழைநீர் கண்டெய்னருக்கு செல்லும் வகையில் குழாய் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். இதில் நிரம்பும் மழை நீரை ‘சம்ப்’ எனப்படும் நிலத்துக்கு அடியில் கட்டப்பட்ட தொட்டியில் குழாய் மூலம் செலுத்தலாம்.
 
மேற்கூரையில் தேவைக்கு ஏற்ப வடிதொட்டிகளை அமைத்து அதற்கான இணைப்புகளை உருவாக்க வேண்டும். சேகரிக்கும் மழை நீர் பல  ஆண்டுகள் கெடாமல் இருக்க, அதன் மீது காற்றும், வெப்பமும் படாமல் இருக்க வேண்டும். இதற்கான நவீன கலன்கள் சந்தையில் கிடைக்கின்றன. 3 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு தேவையான மழைநீர் கட்டமைப்பை உருவாக்க ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். இந்த செலவுக்கு பிறகு வாழ்நாள் முழுவதும் குடிநீருக்கு என தனியாக செலவு செய்ய தேவையில்லை. இதை உணர்ந்து பலர் தற்போது தங்கள் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக என்னிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.

குடிக்க தகுதி உள்ள நீர் இருக்கும் நாடுகள் பற்றிய கணக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் நடத்தியது. இதில் 122 நாடுகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் இந்தியாவுக்கு 120–வது இடம் கிடைத்தது. அதாவது இந்தியாவில் உள்ள நீரானது குடிக்க தகுதியானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு தூய்மையான குடிநீர் ஆதாரத்தை உருவாக்க அரசு அக்கறை காட்ட வேண்டும். மழை குறைவாக பெய்தாலும், இஸ்ரேல் போன்ற நாடுகளில் கிடைக்கும் மழைநீரை சேகரித்து சக்தி வாய்ந்த மோட்டார்கள் மூலமாக நிலத்தடியில் செலுத்துகிறார்கள். நாம் இயற்கையான முறையிலே செலுத்தி, தூய்மையான நீர் ஆதாரத்தை பெருக்கவேண்டும்.
 

‘ஆற்று நீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். குளத்து நீர் கபம் போக்கும். சோற்று நீர் மூன்றையும் போக்கும்’ என்கிறது சித்தர் பாடல் ஒன்று. வாதம், பித்தம், சிலேத்துமம், ரோகம், கபம் ஆகிய 5 நோய்களில் மூன்றை நீரே குணப்படுத்துகிறது. எனவே குடிக்கும் நீரை தூய்மையாக வைத்திருப்பது நமது கடமை. மழை நீர் கட்டமைப்புகளை உருவாக்கி தூய்மையான நீரை சேகரிக்கலாம்’’ என்றார், மழை மனிதர்  வரதராஜன்.

இவரது மனைவி ரோசாலிசுசீலா மரணமடைந்து விட்டார். மகன் சுரேஷ், மகள் லதா. மருமகள் பரிமளா. வரதராஜன் திருவாரூர் ஜி.டி. நகரில் வசித்து வருகிறார்.

வரதராஜனின் மருமகள் பரிமளா சமையலுக்கு மழை நீரையே பயன்படுத்துகிறார். சமையல் அறையில் வைக்கப்பட்டுள்ள சிறு சிறு கலன்         களில் மழை நீரை நேரடியாக சேகரிக்கும் வகையிலான கட்டமைப்பை வரதராஜன் உருவாக்கி யிருக்கிறார். மழை நீரை சமையல் பாத்திரத்தில் பிடிப்பதற்கென தனி குழாயும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டமைப்பிற்கு ‘‘அடுக்களையில் அமிர்தம்’’ என்ற பெயரையும் அவர் வைத்திருக் கிறார். வீட்டின் தரை தளத்தில் இவர் சேகரித்த மழை நீர் ஏராளமான கலன்களில் அடைத்து காற்று, ஒளி படாத வகையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அடை மழை பெய்யும்போது நீரை சேகரிக்கும் விதத்தில் தனது வீட்டு தரை தளத்தையும் அமைத்திருக்கிறார்.



No comments:

Post a Comment