Sunday, January 31, 2016

2.27 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சை அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடப்பு சம்பா 2016ல் நெல் கொள்முதல் பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் சிவதாஸ்மீனா, தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் பாலசந்திரன் வரவேற்றார். 

கலெக்டர்கள் தஞ்சை சுப்பையன், திருவாரூர் மதிவாணன், நாகப்பட்டிணம் பழனிச்சாமி ஆகியோர் விளக்க உரையாற்றினர். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும்போது, கடந்த நான்கே முக்கால் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இதுவரை ரூ.376 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவம் 2015-16ம் ஆண்டில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மட்டுமின்றி கூட்டுறவுத்துறை, முதன்மை விவசாய  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனம் மூலமாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக ஈரப்பதத்தை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. உடனுக்குடன் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட கலெக்டர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் 1230 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 2.27 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 300 மூட்டைகளுக்கு மேல் வைத்திருக்கும் பெருவிவசாயிகள் வசதிக்காக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் செய்ய நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் முழுவதும் கொள்முதல் நிலையங்களிலிருந்து லாரிகள் மூலம் நவீன அரிசி ஆலைகள், தனியார் அரவை முகவர்கள், அரசு சேமிப்புக் கிடங்குகள் திறந்தவெளி சேமிப்பு நிலையங்கள், ரயில் தலைப்புகள் ஆகிய இடங்களுக்கு தினந்தோறும் இயக்கம் செய்யப்படும். வெளி மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைகளுக்கு ரயில் வேகன்கள் மூலம் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டிணம், திருவாரூர், நீடாமங்கலம், பேரளம் ஆகிய ரயில் தலைப்புகளிலிருந்து தினந்தோறும் நெல் இயக்கம் செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதுமின்றி சீரான கொள்முதல் நடைபெற மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் சம்பந்தமாக புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தஞ்சை 04362-236823, திருவாரூர் 04366-226899, நாகப்பட்டிணம் 04365-251353, சென்னை நிர்வாக இயக்குனர் அலுவலகம் 94451-90660, 94451-90661, 94451-90662 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.

Source: Dinakaran

No comments:

Post a Comment