Thursday, January 28, 2016

திருந்திய நெல் சாகுபடி முறை: வேளாண் அலுவலர் யோசனை


திருந்திய நெல் சாகுபடி முறையில், ஒற்றை நாற்று நடவுமுறையில் அதிக மகசூல் கிடைக்கும், என வேளாண் உதவி இயக்குனர் ஆசைதம்பி கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு, 25 முதல், 30 கிலோ வரை விதை நெல்லுக்கு பதில், திருந்திய நெல் சாகுபடியில், 2 முதல், 3 கிலோ விதை போதுமானது. மேட்டுப்பாத்தி நாற்றங்கால், ஏக்கருக்கு ஒரு சென்ட் பரப்பளவு போதுமானது. நாற்றங்கால் பரப்பு குறைவாவதால், நீர் பாய்ச்சுதல், பூச்சி, நோய் கண்காணிப்பு குறையும். சென்டுக்கு, 2 கிலோ டி.ஏ.பி., உரத்தை தூள் செய்து இட வேண்டும். 30 முதல், 40 நாள் வயதுள்ள நாற்றை நடவு செய்வார்கள். இம்முறையில், 10 முதல், 15 நாள் வயதுள்ள இளம் நாற்றை, ஒரு குத்துக்கு ஒரு நாற்று என நட வேண்டும். 22.5 செ.மீ.,க்கு, 22.5 செ.மீ., என்ற அளவில், முக்கால் அடி இடைவெளி பயிருக்கு பயிர், வரிசைக்கு வரிசை இருக்க வேண்டும். கயிற்றில், ஒவ்வொரு வரிசைக்கும் அடையாளம் செய்து, நட வேண்டும். சீரான இடைவெளியால், கோனோவிடார் களைக்கருவியை பயன்படுத்தலாம். மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு, வேர் வளர்ச்சி அதிகரிக்கும். தவிர, 10 நாள் இடைவெளியில், நாற்று இடையில் கோனாவிடார் வைத்து உருட்ட வேண்டும். இதனால், ஒரு டன் அளவுக்கு, களைகள் அமுக்கப்பட்டு, பசுந்தாள் உரமாகும். இதன் மூலம், மண்ணில் அங்கப்பொருளின் அளவு அதிகரிக்கும். சாதாரண முறையைவிட, இம்முறையில் பாதி அளவு நீரே போதுமானது. ஈரப்பதம் மறைந்து, மண்ணில் சிறு கீரல் தோன்றும்போது, மீண்டும் நீர் பாய்ச்ச வேண்டும். இதனால், 30 முதல், 120 தூர்கள் வரை வளரும். பூச்சி, நோய் தாக்குதல் குறையும். இம்முறையில், ஒரு ஏக்கரில் சாதாரணமாக, 4,000 கிலோ மகசூல் பெறலாம். அதிகமாக வைக்கோலும் கிடைக்கும். சாதாரண முறையைவிட, 7 முதல், 10 நாட்களுக்கு முன் அறுவடை செய்யலாம். இம்முறையில், ஏக்கருக்கு, 15,000 ரூபாய் நிகர லாபம் கிடைக்கும், என அவர் தெரிவித்தார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment