Friday, February 26, 2016

கொத்தமல்லி செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: குறுகியகாலத்தில் அதிக பலன்


ஆண்டிபட்டி பகுதியில் குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் கொத்தமல்லி செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கீரையாகப்பயன்படும் கொத்தமல்லி செடியின் இலைகள் சமையலில் சுவை மற்றும் மணத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. மூலிகைத்தன்மை கொண்ட இவை குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே செழித்து வளரும் தன்மை கொண்டதால் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படுவதில்லை. ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம் கிராமங்களில் விவசாயிகள் சிலர் கொத்தமல்லி செடி சாகுபடி செய்துள்ளனர். மழை மற்றும் பனிக்காலங்களில் நடவு செய்யப்படும் இச்செடிகள், 40 நாளில் பலன் தரத்துவங்கி விடும். தினமும் வேறுடன் பிடுங்கப்படும் இவை ஆண்டிபட்டி, மதுரை மார்க்கெட் பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கொத்தமல்லி செடி சாகுபடி விவசாயி கொத்தப்பட்டி சத்தியமூர்த்தி கூறியதாவது:
டிசம்பர், ஜனவரியில் நடவு செய்யப்பட்ட கொத்தமல்லி செடிகள் இன்றளவும் பலன் தருகிறது. வெயில் தாக்கம் அதிகரிக்கும்போது இவை பாதிக்கப்படும். இச் சாகுபடிக்கான செலவு மிகவும் குறைவு. நிலத்தில் இயற்கை உரமிட்டு நன்கு பராமரித்து வந்தால் இச் சாகுபடியில் ஏக்கருக்கு 10 டன் வரையில் விளைச்சல் கிடைக்கும். முகூர்த்த காலங்களில் கொத்தமல்லிக்கு கிராக்கி ஏற்படும். அப்போது விலை கிலோ ரூ. 20 முதல் 30 வரை கூட கிடைக்கும். தற்போது ரூ.15க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ. 10க்கும் கீழே செல்லும்போது விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடும். குடும்பத்துடன் சொந்தமாக விவசாயம் செய்து வருபவர்களுக்கு கொத்தமல்லி செடி சாகுபடி தொடர்ச்சியான வேலை வாய்ப்பு , லாபத்தையும் தரும், என்றார்.

source : dinamalar

No comments:

Post a Comment