Sunday, February 28, 2016

சிறுதானிய சாகுபடியில் அதிகரிக்கும் ஆர்வம்...


தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான வேப்பூர் பகுதி இளைஞர்கள் தொடர் முயற்சி செய்து சிறுதானிய பயிர்களில் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியமானது கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் தமிழகத்தின் பின்தங்கிய ஒன்றியமாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அதிக லாபம் ஈட்டக்கூடிய கரும்பு, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பணப்பயிர்களும், கேழ்வரகு, வரகு, திணை, குதிரை வாலி உள்ளிட்ட சிறுதானியப் பயிர்களும் அதிளவில் சாகுபடி செய்யப்பட்டு நல்ல லாபம் ஈட்டி வந்தனர். பின்னர் பருவ மழை மாற்றத்தால் படிப்படியாக சிறுதானியங்கள் மற்றும் பணப்பயிர்களின் சாகுபடியை கைவிட்டு, மக்காசோளம், பி.டி ரக பருத்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பருத்தி, மக்காச்சோளத்தை பயிரிடப்பட்டு வந்ததால், பாரம்பரியமான சிறுதானியப் பயிர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டன. இந்நிலையில் பாரம்பரியமிக்க சிறுதானியத்தின் மகத்துவத்தை உணர்ந்த வேப்பூர் பகுதி இளைஞர்கள் பாமரர் ஆட்சியியல் கூடம் என்ற அமைப்பை உருவாக்கி வரகு, குதிரைவாலி, சாமை, திணை, நாட்டுக்கம்பு, இருங்கு சோளம், மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பயிர்களின் முக்கியத்துவத்தை அந்தந்தப் பகுதி விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று உணர்த்தி வருகின்றனர்.
அதனடிப்படையில், அப்பகுதியில் கடந்த ஆண்டு 20 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வரகு, திணை உள்ளிட்ட சிறுதானியங்களின் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து அப்பயிர்களை பராமரிப்பது களையெடுப்பது குறித்து வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளித்ததோடு, விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிகழாண்டு சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளும் அதிக லாபம் ஈட்டியுள்ளனர்.
மேலும், அடுத்த பருவத்துக்காக அப்பகுதியில் உள்ள இயற்கை விவசாய ஆர்வலர்களும், சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் சிறுதானியங்களை பயிரிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் பட்டதாரி இளைஞர்கள் கூடுதல் ஆர்வத்தோடு சிறுதானிய வயல்களைப் பார்வையிடுவது, அனைத்து வகை பயிற்சிகளிலும் பங்கேற்பது உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
சுமார் 15 ஆண்டுகளாக அழிந்து வந்த சிறுதானியங்கள் தற்போது பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் பகுதிகளில் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றால் இது, அப்பகுதி இளைஞர்களின் தொடர் முயற்சிக்கான வெற்றியாகும். அழியும் நிலையில் உள்ள சிறுதானியங்களை மீட்டெடுக்க ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் இளைஞர்கள் முன்வந்தால் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் சிறுதானிய பயிர்களை மீட்டெடுக்க முன்மாதியாக இருப்போம் என்றனர் பாமரர் ஆட்சியியல்கூட பட்டதாரி இளைஞர்கள்.

Source : Dinamani

No comments:

Post a Comment