Friday, February 26, 2016

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்:அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல்


நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்று, கர்நாடக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு சார்பில், நவீன் தொழில்நுட்ப விவசாயம் என்ற கருத்தங்கில் கலந்து கொண்டு அவர் பேசியது:
தேசிய அளவில் விவசாய நிலங்கள் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதற்கு தொழில் துறை, நகரமயமாக்கல் முக்கிய காரணமாகும்.
விவசாயத்தை லாபகரமாக்க வேண்டும். அதற்கு நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி, பலன் பெற வேண்டும். விவசாயத்திலிருந்து இளைஞர்கள் விலகி செல்வது அதிகரித்து வருகிறது.
எனவே, நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்திற்குள் இளைஞர்களை ஈர்க்க முடியும். எதிர்காலத்தில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் முக்கிய பங்களிக்கும்.
விவசாயத்திலும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலனடைய முடியும். இதனை விவசாயிகளுக்கு புரியவைக்க வேண்டும். அதுமட்டுமல்லாது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதோடு, அவர்களின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு தொடர்ந்து பிரச்னைகள் அதிகரித்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பின் தலைவர் தல்லம் துவாரகநாத், மூத்த துணைத் தலைவர் தினேஷ், துணைத் தலைவர் கே.ரவி, முன்னாள் தலைவர்கள் சம்பத்ராமன், சிவசண்முகம், ஏசிஏஆர்எஸ் தலைவர் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

source : Dinamani

No comments:

Post a Comment