Wednesday, March 23, 2016

வறண்ட பூமியில் தர்ப்பூசணி விவசாயம் ரூ. 1.60 லட்சம் வரை வருமானம்


விருதுநகர் மாவட்டத்தின் வறட்சி பகுதியான திருச்சுழி, தொட்டியாங்குளம் கிராமத்தில் விவசாயி கணேசன் என்பவர், தர்ப்பூசணி பயிரிட்டுள்ளார். ரூ. 40 ஆயிரம் செலவு செய்ததற்கு ரூ. 1.60 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 
 கோடை தொடங்கி விட்டால் பொதுமக்கள் குளிர் பானங்களை நாடுவது வழக்கம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே நுங்கு, பதனீர், இளநீர், வெள்ளரி, தர்ப்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிக நீர்ச்சத்து உள்ளதால் தர்பூசணிக்கு உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை உண்டு. கொழுப்புச் சத்து மிக குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் லைக்கோபின் தர்ப்பூசணியில் அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் தர்ப்பூசணி விற்பனை அமோகமாக உள்ளது.
இதையடுத்து குறுகியகாலப் பயிராக வறண்ட பூமியான திருச்சுழி பகுதியில் தர்ப்பூசணியைப் பயிரிட்டுள்ளார், விவசாயி கணேசன். அவர் கூறியதாவது:
 தர்ப்பூசணி நடவு செய்த இரண்டு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கும்.
 ஒரு பழம் 12 கிலோ முதல் 15 கிலோ வரை இருக்கும். ஒரு செடியில் எட்டு பிஞ்சு விடும். அதில் ஆறு பிஞ்சுகளை நீக்கிவிட்டால் இந்த மகசூல் கிடைக்கும். வாரம் ஒரு முறை மட்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
தற்போது 4 ஏக்கரில் ரூ. 40 ஆயிரம் செலவில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டுள்ளேன். பழங்களை கிலோ ரூ.10 வீதம் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்ட  வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இதுவரை ரூ. 1.60 லட்சம் வரை விற்பனை செய்துள்ளேன் என்றார் அவர்.

source : Dinamani

No comments:

Post a Comment