Thursday, March 31, 2016

தொழில்நுட்பங்களை கடைபிடித்தால் வீரிய ஒட்டு மக்காச்சோளத்தில் அதிக மகசூல் பெறலாம் வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் வீரிய ஒட்டு மக்கா சோளம் சாகுபடியில் தொழில் நுட்பங்களை கையாண்டால் அதிக மகசூல் பெறலாம் என்று சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மக்கா சோளம் கால்நடை தீவனமாகவும், சமையல் எண்ணை எடுப்பதற்காகவும் பயன்படுவதுடன் தொழிற்சாலைகளில் மக்காச்சோளம் ஸ்டார்ச், பிரீவர்ஸ், மக்காச்சோளம் மைதா, சிரப், சர்க்கரை, குளுக்கோஸ் போன்ற பல பொருட்கள் தயரிக்கவும் பயன்படுகிறது. இதில் கோ-1, கே-1, கங்கா -5, கே.எச் -1,2,3, கோஎச்.எம் -5, எம் -900, எம்.ஹைசெல், சின்ஜென்டா, என்.கே -6240, பயனீர் -30 வி -62, பயனீர் -30 வி -92 மற்றும் பிக்பாஸ் ஆகியன முக்கிய வீரிய ஒட்டு ரகங்களாகும்.

ஏக்கருக்கு 6 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். விதை மூலம் பூசன நோயை தடுக்க 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோ டெர்மா விரிடி என்ற உயிரியல் பூசான கொல்லியை கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து பின்பு விதைக்க வேண்டும். இத்துடன் உயிர் உரவிதை நேர்த்தியும் செய்யவேண்டும். 1 ஏக்கருக்கு 500 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை ஆரிய வடி (அரிசி) கஞ்சியில் கலந்து அதனுடன் பூசன விதை நேர்த்தி செய்த விதையை கலந்து நிழலில் அரை மணிநேரம் உலர்த்தி பின் 60 X 20 செ.மீ இடைவெளியில் 4 செ.மீ ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும். 

விதைத்த 3 நாட்களுக்குப்பின் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் போது களைக்கொல்லியை கைத்தெளிப்பான மூலம் தெளிக்கவேண்டும். களைக்கொல்லி பயன்படுத்தாவிடில் கை களை எடுக்கவேண்டும். தேவைக்கேற்ப 6 முதல் 8 முறை நீர்பாசனம் செய்யவேண்டும். பூக்கும் தருனத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு தொழில் நுட்பங்களை கடை பிடித்தால் 1 ஏக்கரில் 2,500 முதல் 3,000 கிலோ வரை மகசூல் எடுத்து ரூ.45,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.  இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

source : dinakaran

No comments:

Post a Comment