Thursday, March 31, 2016

கோவை வேளாண் பல்கலைக்கு கை நிறைய பரிசு! ஆராய்ச்சி திட்டங்களுக்கு அங்கீகாரம்


கோவை:விவசாயத்தில் ரசாயனங்களை தவிர்த்து, இயற்கை வழி பயிர் மேம்பாடு ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்புகளுக்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலை, கடந்த ஐந்தாண்டுகளில், 21 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு மற்றும் இணைப்பு கல்லுாரிகள், 14 ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில், துறை சார்பான பயிர் மேம்பாடு, உற்பத்தி, பூச்சி கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட ஆராய்ச்சிகள் நடக்கின்றன.இத்தகைய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தேசிய, சர்வதேச அளவில் பல்கலை, கல்லுாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.இதில் நடப்பாண்டு, டில்லி 'வேர்ல்ட்வைட் அச்சீவர்ஸ்' அமைப்பின், 'ஆசிய எஜூகேஷன் விருதுகள்' வழங்கும் விழாவில், தேசிய அளவில் சிறந்த வேளாண் பல்கலைக்கான விருது, கோவை வேளாண் பல்கலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே போல், 2011-2016 வரை, 21 விருதுகளை பெற்றுள்ளதாக கூறுகிறார், வேளாண் பல்கலை, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்கக இயக்குனர் சந்திரசேகரன்.அவர் கூறியதாவது:விவசாயத்தில் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக வேளாண் பல்கலையில், மாணவர்கள், பேராசிரியர்கள், விவசாயிகள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் பயன்படும்படியான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதில், கல்லுாரி கட்டமைப்பு, பேராசிரியர்கள் கற்பிக்கும் முறை, வேலைவாய்ப்பு, பயிற்சி பட்டறைகள், ஆராய்ச்சிக்கான வழிகாட்டல், விரிவாக்க முறை, விவசாயிகள்- மாணவர்கள்- ஆராய்ச்சியாளர்கள் தொடர்பு, நவீன விவசாயம் உள்ளிட்டவை அடங்கும். இப்படி, அனைத்து திட்டங்களையும், தமிழ்நாடு வேளாண் பல்கலை சிறப்பாக செயல்படுத்தியதால், இவ்விருது பெற முடிந்தது. 2014ம் ஆண்டு, கலை, அறிவியல், மருத்துவம், வேளாண், பொறியியல் என அனைத்து தொழில்சார் மற்றும் தொழில்சாரா கல்லுாரி, பல்கலை கணக்கீட்டிலும், 'ஒட்டுமொத்த விருது' வேளாண் பல்கலைக்கு வழங்கப்பட்டது. இதே போல் ஆராய்ச்சிகள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், புதிய அறிமுகங்கள் உள்ளிட்டவற்றுக்காக, 21 விருதுகள் கிடைத்துள்ளன. வரும் ஆண்டில், ரசாயன கலவை இல்லாத, சங்க கால இயற்கை வழி விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான, நவீன ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதோடு, விவசாயிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் இடையேயான தொடர்பு அதிகரிக்கவும், புதிய உத்திகள் கையாளப்படும்.இவ்வாறு, சந்திரசேகரன் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment