Monday, March 21, 2016

கோழிகளுக்கு கழிச்சல்: கட்டுப்படுத்த ஆலோசனை

கோடையில் கோழிகளுக்கு ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்த, பண்ணையாளர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மண்டல கால்நடை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது: வெள்ளைக்கழிச்சல் நோயானது கோடை காலத்தில், எல்லா வகையான கோழிகளையும் எளிதில் தாக்கி கொல்லக்கூடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தடுப்பூசியே இதற்கு மருந்தாகும். இந்நோய் தாக்கிய கோழிகள் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் கழிச்சல் போகும். தலையை ஒரு பக்கமாக இழுத்தவாறு காணப்படும். கழுத்து முருக்கல், தலை திருகல், பின்னோக்கி தள்ளாடி நடத்தல், இரை எடுக்காமல் இருக்கும். இவற்றை கொண்டு எளிதாக கண்டு பிடிக்கலாம். இதை தடுக்க கோழிக் குஞ்சுகளுக்கு ஏழாவது நாளில், ஆர்.டி.வி.எப்., என்னும் தடுப்பு மருந்தை கண் மற்றும் நாசி வழியாக சொட்டு மருந்தாக கொடுக்கலாம். லேசேட்டோ என்ற தடுப்பு மருந்தை, 21 நாளில் வாய் வழியாகவும் கண் வழியாகவும் வழங்கலாம். ஆர்.டி.வி.கே., தடுப்பூசியை, 75வது நாளில் ஊசி மூலம் செலுத்தலாம். இதற்காக கால்நடை மருத்துவமனைகளில் சனிக்கிழமை தோறும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment