Thursday, March 31, 2016

மகசூல் அதிகரிக்க சான்று பெற்ற விதைகள்

 மகசூல் அதிகரிக்க சான்று பெற்ற விதைகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பயறு வகைகளில், உளுந்து, கடலை, துவரை, பாசிப்பயிறு உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் உள்ளன. இத்தகை ரகங்களை விதை நேர்த்தி செய்தால் மட்டுமே மகசூல் அதிகரித்து, கூடுதல் வருவாய் கிடைக்கும். அதனால், சான்று பெற்ற விதைகளை வாங்கி, சாகுபடி செய்கின்றனர். அவர்களுக்கு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பயிற்சி பெற்ற பலரும், மாவட்டம் முழுவதும் விதை நேர்த்தி செய்து தோட்டக்கலை விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, சேந்தமங்கலம் விதை உற்பத்தியாளர் நல்லதம்பி கூறியதாவது: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், விதை நேர்த்திக்கென பயிற்சி பெற்றுள்ளேன். ஒரு ஏக்கருக்கு, உளுந்து சாகுபடி செய்ய, 4,000 முதல், 5,000 ரூபாயும், கடலைக்கு, 10 ஆயிரம் ரூபாய், துவரைக்கு, 4,000 ரூபாய், பாசிப்பயிறுக்கு, 4,000 முதல், 5,000 ரூபாய் வரை செலவாகும். உளுந்து சாகுபடியில், 12 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய், கடலைக்கு, 16 ஆயிரம் ரூபாய், துவரைக்கு, 14 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய், பாசிப்பயிறுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம். அறுவடை செய்யப்பட்ட விதைகள், அதற்கான விதைச்சான்று பெற்று விற்பனை செய்தபின், அதற்கான தொகை பெறுவதற்கு காலதாமதமாகிறது. ஆனால், குடோனில் கொண்டு சென்று விற்பனை செய்தால், உடனே பணம் கிடைத்துவிடுகிறது. அதற்கான நடைமுறையை தளர்த்தி, விரைந்து சான்று அளித்து, உற்பத்தி செய்த விதைக்கு தாமதமின்றி தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


source : Dinamalar

No comments:

Post a Comment