Thursday, March 31, 2016

இயற்கை உரங்களால் அதிக மகசூல் குறு விவசாயிகள் நம்பிக்கை

நீலகிரி மாவட்டத்தில், விவசாயிகள் இயற்கை உரம் பயன்பாட்டிற்கு படிப்படியாக மாறி வருகின்றனர். நீலகிரியில், தேயிலை உட்பட மலைக்காய்கறி பயிர்களுக்கு கூடுமானவரை, வேதி உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  இவ்வகை உரங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால், மண்ணின் இயற்கையானசத்து குறைந்து, மண்ணின் தன்மை கெடுகிறது. வேதி உரங்களின் பயன்பாடு காரணமாக, விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பதில்லை.  மண் பரிசோதனையின் அவசியம் கருதி, அரசு பல்வேறு வகைகளில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக, பெரும்பாலான விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, குறைபாடுகளுக்கு ஏற்ப, நிவா்த்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக விளைச்சல் கிடைக்கும் வகையில், முட்டைகோஸ் தோட்டங்களுக்கு, பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த தயாராகிவிட்டனர். குறைந்த விலையில், இயற்கை உரங்கள் உள்ளூரிலேயே கிடைப்பதால் விவசாயிகளுக்கு அனுகூலமாக உள்ளது. இதனால், முட்டைகோஸ் உள்ளிட்ட மலைக் காய்கறி தோட்டங்களில் இயற்கை உரங்களை பயன்படுத்துவதில், விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். அரசு மானியம் வழங்குவதுடன், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் அதிகரிக்கும். கீழ்கோத்தகிரி பகுதி விவசாயி பீமன் கூறுகையில், வேதி உரங்களால், பூமியில் சத்து குறைந்து, எதிர்பார்த்த மகசூல் கிடைப்பதில்லை. இதனால் குறைந்த விலையில், மாட்டு சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தினால், எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என விவசாயி தெரிவித்தார்.


Source : dinakaran

No comments:

Post a Comment