Tuesday, April 5, 2016

மாடி தோட்டத்தில் மூலிகை செடிகள் வளர்த்து சாதிக்கும் சகோதரிகள்


 மாடித்தோட்டத்தில் அழகுக்காக வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் ரக செடிகளுடன், மூலிகை குணம் வாய்ந்த செடிகளை வளர்த்து சகோதரிகள் 2 பேர் சாதித்து வருகின்றனர்
கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த சகோதரிகள் ராணி சித்தி ரகுமான் கனி, 42, முகம்மது பாத்திமா, 38. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டின் மொட்டை மாடியில் 150 தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள், கொடிகள் நன்கு செழித்து வளர்ந்து அப்பகுதியை பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துள்ளது. மருதானி, கருவேப்பில்லை, எலுமிச்சை, வெற்றிலை, துளசி, கண்டங்கத்தரிக்காய், துõதுவளை, ஆடுதொடா, நெல்லிக்காய் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்த செடிகளுடன், தக்காளி, கத்திரி, ரோஜா, வாடாமல்லி, சுருள்வாழை, மலைப்பிரதேசங்களில் வளரும் அரியவகை செடிகளும் பயிரிட்டுள்ளனர். இதற்காக வீட்டு மாடியில் 24க்கு 25 அடி அகலத்தில் மாடித்தோட்டம் அமைத்துள்ளனர்.
மாடிதோட்டம் குறித்து சகோதரிகள் கூறியதாவது: மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பாக நாளிதழ்களில் படித்ததன் விளைவாக நாமும் உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை அமைத்துள்ளோம். மூலிகைச்செடிகளுடன், மலர்செடிகளையும் தொட்டியில் இட்டு வளர்ப்பதால், மாடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது நிலவும் கோடை வெயிலால் வீடு குளுமையாக உள்ளது. செடிகளுக்கு போதுமான நீர் விட்டு பராமரிக்கிறோம். இயற்கை உரங்களை மட்டுமே இடுகிறோம். காலை நேரங்களில் வரும் தேனிக்கள், வண்ணத்துப்பூச்சி, தேன்சிட்டு, சிறு பறவைகள் இவற்றில் வந்து உலாவருகிறது. அவற்றினை காணும் போது மனதிற்கு நிம்மதியளிக்கிறது. வீட்டு வேலைகள் செய்தது போக மீதியுள்ள நேரங்களில் வீணாக பொழுதை கழிக்காமல் நாமும் பயனுள்ளதாக முயற்சிக்க மாடித்தோட்டத்தினை தேர்வு செய்தோம். எங்களிடம் இலவசமாக செடிகளையும், ஆலோசனைகளையும் இப்பகுதிமக்கள் பெற்று செல்கின்றனர். வீட்டுத்தேவைக்கான காய்கறிகளை பயிரிட்டு தேவையை பூர்த்தி செய்கிறோம், குடும்பத்தலைவிகளும் இதுபோன்று முயற்சிக்கலாம், என்றனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment