Sunday, April 10, 2016

கோடைகால பராமரிப்பு, உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்



கோழிப்பண்ணையாளர்கள், கோடைகால பராமரிப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆராய்ச்சி நிலையம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அடுத்த 4 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 1 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 80.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 73, 70, 63, 63 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 40, 32, 30, 28 சதவீதமாகவும் இருக்கும்.

பாதுகாப்பு முறை

கோடை மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேகமூட்டம் சற்றே அதிகமாகும். ஆதலால் பகல் வெப்பம் சென்ற வாரத்தைவிட குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆயினும் குறையும் வெப்பத்தின் அளவு கோழிகளுக்கு முழு அளவில் சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே, கோழிகளில் வெப்ப அயற்சி தொடரும் வாய்ப்பு உள்ளது. அதிக வெப்பத்திற்கு கோழிகள் தற்போது பழகிக்கொண்டு வருவதால், குறைந்த முட்டை உற்பத்தி மற்றும் முட்டை எடை, தகுந்த கோடை மேலாண்மை முறைகளால் மீண்டும் இயல்பான நிலையை அடைய முயற்சிக்கும். குறைவான தீவன எடுப்பும், அதற்கேற்ற முட்டை உற்பத்தியும் கோடை காலத்தில் உற்பத்தி செலவை குறைக்க உதவும் காரணிகள். தகுந்த கோடை மேலாண்மை, குறிப்பாக நீர் மேலாண்மை, முட்டை உற்பத்தி செல வைக் குறைக்க வல்லது.

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி மற்றும் மேல்மூச்சுக்குழாய் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. ஆகவே, பண்ணையாளர்கள் அதற்கேற்றாற்போல் தகுந்த கோடைகால பராமரிப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

source : Dailythanthi

No comments:

Post a Comment