Sunday, April 10, 2016

மக்கள் அதிகம் பயன்படுத்த துவக்கம் சிறுதானியம் பயிரிட முழு மானியம்

மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ள சிறுதானிய பயிர்களை பயிரிட தமிழக அரசு முழு மானியம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. பல்வேறு நோய்களுக்கான இயற்கை மருந்தாக சிறுதானியங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆனால் அதற்கேற்றவாறு அதனை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே முழு மானியம் வழங்கி சிறுதானியம் பயிரிட அரசு புத்துயிர் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுதானியம் என்பது புல்வகை தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை தானியங்களாகும். சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, சோளம், காக்கா சோளம், குதிரைவாலி, வரகு உள்ளிட்ட தானியங்களை நமது மூதாதையர்கள் பயன்படுத்தியதால் சராசரி வயது 90க்கு மேல் இருந்தது. சிறுதானியம் உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்த காரணத்தினால், லாபமற்ற தொழிலை செய்ய முன்வராததால் விவசாயிகள் சிறுதானியம் பயிரிடுவதை நிறுத்திவிட்டனர். 

எனவே சிறுதானிய பயிருக்கு புத்துயிர் அளிக்க அரசு முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து விவசாயி குமரகுரு கூறுகையில், ‘சிறுதானியம் என்பது எவ்வித பக்கவிளைவும் இல்லாதது. இருந்தும், சிறுதானியம் பயிர் வைப்பது குறைந்துவிட்டது. கேழ்வரகு, சோளம், கம்பு போன்றவற்றை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அதற்கு புத்துணர்வு கொடுக்க வேண்டும். 
அவ்வாறு செய்தால் தான் விவசாயிகள் பயிர் வைக்க முன்வருவார்கள். கேழ்வரகை இன்றைக்கு படித்தவர்கள், பணக்காரர்கள் என எல்லோருமே சாப்பிட துவங்கி விட்டார்கள். சிறுதானிய பயிர் வைக்க ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் உரம், ஏர்உழுதல், எரு உள்ளிட்ட செலவிற்கு ரூ.பத்தாயிரம் செலவாகும். சிறுதானியம் இன்றைய வாழ்க்கை சூழலில் அத்தியாவசிய, மருத்துவகுணங்களும் நிறைந்தவையாக உள்ளது. 

எனவே அரசு முழுமானியம் வழங்க வேண்டும். இவற்றிற்கு தேவையான பூச்சி மருந்து, எரு  உள்ளிட்டவற்றிற்கான செலவை அரசே ஏற்க வேண்டும். இவற்றை மானிய விலையில் கொடுக்க வேண்டும். இயற்கை விவசாயிகளைபோல் சிறுதானிய விவசாயிகளையும் அரசு தத்தெடுக்க வேண்டும். கம்பு ஆனிபட்ட விதை ஒன்றரை கிலோ 380 ரூபாய். ஏக்கருக்கு இரண்டு பாக்கெட் தேவைப்படும். இதை தனியாரிடமிருந்து தான் வாங்க வேண்டும். அரசிடமிருந்து வாங்கினால் முளைக்காது. இந்நிலை மாற வேண்டும். தரமான விதைகளையும் அரசு வழங்க வேண்டும்’ என்றார்.

source : Dinakaran

No comments:

Post a Comment