Thursday, May 26, 2016

கிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் ஜூன் 4, 5-இல் தேசிய அளவிலான நெல் திருவிழா


திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் ஜூன் 4, 5 ஆம் தேதிகளில் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெறுகிறது.
கடந்த 2006 இல் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இத்திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக தேசிய அளவில் நெல் திருவிழா ஜூன் 4, 5 ஆம் தேதிகளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவரங்கில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்கண்டன் தலைமை வகிக்கிறார்.
கிரியேட் அமைப்பு தலைவர் துரைசிங்கம், மேலாண்மை அறங்காவலர் பொன்னம்பலம், தமிழக இயற்கை உழவர் இயக்க மாநில தலைவர் சிக்கல் அ. அம்பலவாணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. ராமசாமி, நபார்டு முதன்மை பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் ஆ. ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.
இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒடிஸா, மேற்கு வங்காளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி வேளாண் வல்லுநர்கள், விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
மேலும், நபார்டு உழவர் மன்ற உறுப்பினர்கள் புதுவாழ்வுத் திட்ட உறுப்பினர்கள், வேளாண் துறையின் அட்மா திட்ட உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள், நிலம்-நீர் நிலைகளைப் பாதுகாத்தல், உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்க வேண்டியதன் அவசியம், பாரம்பரிய நெல் சாகுபடி, உழவர்களுக்கான நபார்டு திட்டங்கள், இயற்கை உழவர் வேளாண் சான்று பெறும் முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. சிறந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்களுக்கு என 10 நபர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படுகிறது. இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் 156 பாரம்பரிய நெல் விதைகள் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 கிலோ வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர், நெல் ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர், நமது நெல்லைக் காப்போம் பெருமாள் கோயில் தெரு, ஆதிரெங்கம், கட்டிமேடு, திருத்துறைப்பூண்டி 614716, திருவாரூர் மாவட்டம் என்ற முகவரியில், அஞ்சல் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 94433 20954, 94878 30954, 04369-220954 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

source: Dinamani

No comments:

Post a Comment