Monday, May 16, 2016

கர்நாடக மாநிலத்தில் இருந்து கோழிக்குஞ்சுகள் வாங்க வேண்டாம் :பண்ணையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்


கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து கோழிக்குஞ்சுகள், கோழித்தீவனங்களை வாங்க வேண்டாம் என பண்ணையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது: கர்நாடக மாநிலம், பிடார் மாவட்டம், ஹமனபாத் வட்டம் மொளக்கேரா கிராமத்தில் பறவைக்காய்ச்சல் நோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன.
எனவே நாமக்கல் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கோழிக்குஞ்சுகள் கோழிகள், கோழி முட்டைகள், வாத்துகள், வாத்து முட்டைகள், வாத்துக்குஞ்சுகள், கோழித்தீவனங்கள் போன்றவற்றை வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கும்போது மருத்துவத்துறையின் சான்றளிக்கப்பட்டவைகளை மட்டுமே வாங்க வேண்டும்.
பண்ணைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக கோழிகள் இறப்பு ஏற்பட்டாலோ அல்லது அதிக கோழிகளுக்கு நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டாலோ உடனடியாக கால்நடை மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் கிருமி நாசினி தெளிப்பு, நோய் தடுப்பு மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கோழி பண்ணைகளின் நுழைவு வாயில்களில் கிருமி நாசினி தொட்டிகள் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும்.
பண்ணை வேலையாட்கள் பண்ணையினுள் நுழையும் போதும், கிருமி நாசினி தொட்டியில் கால்களை நனைத்தும், வேலை முடிந்து வெளியே செல்லும் போதும் கை, கால்களை நன்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னர், உடைகளையும் மாற்றிவிட்டுச் செல்ல வேண்டும்.
பண்ணையின் உள்ளே நுழையும் வாகனங்களின் சக்கரங்கள் கிருமி நாசினி தொட்டியில் முழுமையாக நனைத்த பின்னரே பண்ணையின் உள்ளே அனுமதிக்க வேண்டும். பண்ணையில் மனித நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருத்தல் வேண்டும். ஒரு கொட்டகையிலிருந்து மற்றொரு கொட்டகைக்கு வேலை ஆட்கள் செல்லக் கூடாது.
இந்த அறிவுரைகளை பின்பற்றி பண்ணையாளர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குரும்பபட்டி, புதுப்பட்டி அருகே நல்லூர் வடக்குமேடு ஆகிய இடங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எல்.பாரதிதேவி, நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் கே.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source : dinamani

No comments:

Post a Comment