Tuesday, May 17, 2016

புதிய அரசாங்கத்தின் முக்கியமான வேலை



‘‘உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’’ என்று பாடினார் பாரதியார் அன்று. நாட்டில் 50 சதவீதத்துக்குமேல் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக திகழ்வது விவசாயம்தான். அதிலும் தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களின் வாழ்க்கைச்சக்கரம் சிக்கலின்றி சுழலவும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறவும் விவசாயம் தழைத்தோங்கினால்தான் முடியும். இந்தியாவில் மழை என்றால் வடகிழக்கு பருவமழையும், தென்மேற்கு பருவமழையும்தான் என்றாலும், தமிழக மக்களுக்கு தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்வது அண்டை மாநிலங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழைதான். தென்மேற்கு பருவமழைக்காலம் என்றால் அது ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை பெய்யும் மழைதான். இந்த மழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியில் கேரளாவில் தொடங்கி, அதன் எதிரொலியாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டொ கொட்டு என்று கொட்டும். அதன்பிறகுதான் இந்த மழை கர்நாடகா மாநிலத்தில் மழையை கொடுத்து, தமிழ்நாட்டுக்கும் தண்ணீர் வழங்கும். கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தாக்கத்தினால் அணைகளெல்லாம் நிரம்பி கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் மேட்டூர் அணையை நிரப்பி, காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12–ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். காவிரி டெல்டா பகுதியில் குறுவைபயிர் என்றால் தென்மேற்கு பருவமழையை அனுசரித்தே சாகுபடி தொடங்கும். இன்று வைகாசி மாதம் 4–ந் தேதி. குறுவைபயிர் சாகுபடியை வைகாசி கடைசியில் அல்லது ஆனி மாதம் தொடக்கத்தில் தொடங்கினால்தான், 105 நாள் குறுவைபயிரை அறுவடைசெய்ய வசதியாக இருக்கும். குறுவைக்கு 90 நாட்கள் கண்டிப்பாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். கடைசி 15 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் தேவையில்லை. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்தது ஒருவார காலம் தாமதமாகும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கேரளாவுக்கு ஜூன் 1–ந் தேதிக்கு பதிலாக, 7–ந் தேதிதான் மழை பெய்யத்தொடங்கும் என்றும், இந்த கணிப்பில் 4 நாட்கள் கூடுதலாகவோ, அல்லது குறைவாகவோ இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்தமுறை வழக்கத்தைவிட அதிகமாக, அதாவது 106 சதவீதம் பெய்யும் என்றாலும், தமிழ்நாட்டில் சற்று குறைவாக பெய்யலாம் என அறிவித்துள்ள நிலையில், அந்த குறைவான மழையும் தாமதமாகப்பெய்யும் என்பது சற்று கவலை அளிக்கிறது.

தாமதமான மழை கர்நாடகத்தில் பெய்து, அங்கிருந்து மேட்டூருக்கு தண்ணீர் வந்து, மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்காக திறப்பது நிச்சயமாக தாமதமாகும். இப்போதே மேட்டூரில் 47 அடி தண்ணீர்தான் இருக்கிறது. 90 அடிக்குமேல் தண்ணீர் நிரம்பினால்தான் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட முடியும். இப்போது தமிழ்நாட்டில் பெய்யும் மழை தீவிர பருவமழை அல்ல. திடீரென்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக பெய்யும் மழைதான். இதை நம்பி விவசாயத்தைத் தொடங்கமுடியாது. எனவே, புதிய அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கு இணையாக, தென்மேற்கு பருவமழை தாமதத்தின் காரணமாக ஏற்படும் நிலையை பரிசீலித்து, அந்த மழை வரும்வரை நிலத்தடிநீரை பயன்படுத்துவதற்கு வசதியான ஏற்பாடுகளையும், வந்தபிறகு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும். எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு தண்ணீர் கிடைக்கும்?, அதை பயன்படுத்தி எந்தெந்த வகையான பயிர்களை சாகுபடிசெய்யலாம்? எனவும் முடிவெடுத்து, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அசுரவேகத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். கங்கையையும், தாமிரபரணியையும் இணைக்கும் திட்டத்தை லட்சியமாகவும், முதல்கட்டமாக தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் பணிகளையும் புதிய அரசு செய்யவேண்டும்.

Source : Dinakaran

No comments:

Post a Comment