Saturday, May 21, 2016

கோழிப் பண்ணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்:கால்நடைத் துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்


கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகள் அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துககுத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது: கர்நாடக மாநிலம், பீதார் மாவட்டம், ஹமனபாத் வட்டம், மொளக்கேரா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வரப்பெற்ற நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் 1,110 கோழிப் பண்ணைகள் உள்ளன. சுமார் 4 கோடி கோழிகள் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இக் கோழிப் பண்ணைகள் அனைத்தையும் கால்நடை மருத்துவர்கள் நாள்தோறும் தொடர்ந்து பல்வேறு கோழிப் பண்ணைகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரையில் நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய்த் தாக்கம் முற்றிலும் இல்லை.
இருப்பினும், தொடர்ந்து உயிரிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கோழிப்பண்ணை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையும் கால்நடைத் துறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 50 அதிவிரைவுப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தினமும் கோழிப் பண்ணைகனில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோழிப் பண்ணைகளில் வழக்கத்துக்கு மாறாக அதிகக் கோழிகள் இறப்பு ஏற்பட்டாலோ, அல்லது அதிக கோழிகளுக்கு நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டாலோ, உடனடியாக கால்நடை மருத்துவ அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த அறிவுரைகளைப் பின்பற்றி பண்ணையாளர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, காலாநடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கே.ராமலிங்கம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எல்.பாரதிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment