Wednesday, June 22, 2016

"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'


மா அடர்வு தொழில்நுட்ப முறையைப் பின்பற்றினால் 40 சதவீதம் கூடுதல் லாபம் பெற வாய்ப்புள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் வேளாண் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை வேளாண் கோட்டம், பட்டமங்கலம் கிராமத்தில் தமிழரசன் என்பவரது வயலில் நடைபெற்ற இயந்திர நெல் நடவுப் பணியைப் பார்வையிட்ட ஆட்சியர், 100 கிலோ விலையில்லா நெல் நுண்ணூட்டக் கலவையை வயலின் உரிமையாளரிடம் வழங்கினார்.
குளிச்சார் கிராமத்தில் பத்மநாபன் என்பவரது தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த மா அடர்வு நடவு முறை வேளாண்மையை ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, மா அடர்வு நடவு முறையில் ஒரு ஹெக்டேருக்கு 400 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. சாதாரண நடவு முறையில், 100 கன்றுகள் மட்டுமே நடவு செய்யப்பட முடியும் என்ற இடத்தில், மா அடர்வு நடவு முறையில் 400 மரக்கன்றுகள் நடவு செய்ய முடியும்.
மேலும், இந்த முறையில் இளம் கன்று பராமரிப்பு மற்றும் கவாத்து மூலம் கிளைகளின் வளர்ச்சி, வேரின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு 40 சதவீதம் முதல் அதிக லாபம் பெற வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, மா அடர்வு நடவு முறைக்கு தோட்டக்கலை விவசாயிகள் முனைப்புக் காட்டலாம் என்றார் ஆட்சியர்.
இதைத் தொடர்ந்து, சீர்காழி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், தென்னலக்குடியைச் சேர்ந்த விவசாயி பூ. ராமசாமி என்பவருக்கு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கருக்கு 8 கிலோ வீதம் உளுந்து விதைகளையும், 20 விவசாயிகளுக்கு நெல் நுண்ணூட்டக் கலவைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக, திருக்கடையூர் விதைப் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்புகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
வேளாண் இணை இயக்குநர் ஜெ. சேகர், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சண்முகம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் விஜயகுமார், உதவி இயக்குநர்கள் மோகன்தாஸ், சந்திரஹாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment