Friday, July 15, 2016

தோட்டக்கலைத்துறையில் ரூ.12 கோடிக்கு மானிய திட்டம் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

“மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.12 கோடி மானியம் மூலம் உதவ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது,”என, தோட்டக்கலை துணை இயக்குனர் கிஷோர் குமார் தெரிவித்தார்.
இரண்டாவது பசுமை புரட்சிக்காக ' இருமடங்கு மகசூல், மும்மடங்கு வருமானம்' என்ற கருத்தினை தோட்டக்கலை துறை வலியுறுத்துகின்றது. தோட்டக்கலை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம், பசுமைகுடில், நிலப்போர்வை போன்ற நவீன தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
நடப்பாண்டில் தேசிய தோட்டக்கலை திட்டம் மூலம் 200 எக்டேரில் திசுவாழை நடவு செய்ய மானியம் ரூ.75லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு எக்டேருக்கு ரூ.37,500 மானியம் வழங்கப்படும். விவசாயிகள் திசுவாழை கன்று வாங்கி நடவு செய்ய வேண்டும். கன்று வாங்கியபோதும், நடவு செய்த போது அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.
120 எக்டேரில் தக்காளி நடவு செய்ய ரூ.24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு எக்டேருக்கு தேவையான 13,000 நாற்றுக்கள் ரூ.20 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படும். அரசு தோட்டக்கலை பண்ணையில் குழித்தட்டு முறையில் நடவு செய்து நாற்றுக்கள் வழங்கப்படும். மேகமலை, வெள்ளிமலை, குரங்கனி, போடிமெட்டு, அகமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40 எக்டேரில் மிளகு சாகுபடி செய்ய ரூ.8லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பசுமைக்குடில் 6ஆயிரம் ச.மீ., அமைக்க ரூ.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு 4ஆயிரம் ச.மீ., வரை அமைக்கலாம். இதற்கு ரூ. 70ஆயிரம் முதல் 18 லட்சம் வரை மானியம் கிடைக்கும். காய்கறி, பழங்கள், மலர்கள் சாகுபடிகளை நிலப்போர்வை அமைக்கலாம். இதற்கு 100 எக்டேருக்கு ரூ.16லட்சம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்கு விக்கும் வகையில் ரூ.67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் விளக்குபொறி, இனக்கவர்ச்சி பொறி, தேனீ பெட்டிகள் வழங்கப்படும். தோட்டக்கலை துறையில் பல்வேறு திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி சாகுபடியை ஊக்குவிக்கின்றனர்.
தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் கிஷோர்குமார் கூறுகையில்,“ சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும். பயனடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள முன்னுரிமை பட்டியலில் நிலவரைபடம், சிட்டா, அடங்கல், போட்டோ விபரங்களுடன் பதிவு செய்திட வேண்டும். முன்னுரிமை பட்டியல்படி விவசாயிகளுக்கு இதற்கான மானியம் வழங்ப்படும்,” என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment