Thursday, July 28, 2016

நகத்துக்கு ஆரோக்கியம் தரும் சீமை அகத்தி



நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், நகத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து பார்க்கலாம். நகம் சுத்தமாக இருக்கும்போது அகம் சுத்தமாக இருக்கும். தற்போது ஆண், பெண் இருபாலருக்கும் கை நகங்களில் சொத்தை ஏற்படுகிறது. இது பெரும் பிரச்னையாக உள்ளது.  நகங்கள் ஆரோக்கியமாக இருக்க மேல்பூச்சு மருந்துகள் மட்டும் போதாது. கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ சத்துக்களை கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. முள்ளங்கி, முட்டைகோஸ் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

கீரைகள் அதிகமாக சாப்பிட்டால் நகங்கள் ஆரோக்கிமாக இருக்கும். சீமை அகத்தியை பயன்படுத்தி நகச்சுற்றுக்கு மருந்து தயாரிக்கலாம். தோட்டம், சாலையோரங்களில் சீமை அகத்தி அதிகளவில் காணப்படும். அகத்தி கீரையை போன்ற இலைகளை கொண்டது. இந்த சீசனில் சீமை அகத்தி பூக்கள் தாராளமாக கிடைக்கும் என்பதால் அதன் பூக்கள் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் சீமை அகத்தி இலைகளை அரைத்து பயன்படுத்தலாம்.

பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், சீமை அகத்தி பூக்களை சேர்க்கவும். தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி எடுக்கவும். இதை நகத்தில் வைத்தால் நகச்சுற்று சரியாகும். சீமை அகத்தியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்க்கு மருந்தாகிறது. நகம் ஆரோக்கியம் பெறும். சீதாபழ இலையை பயன்படுத்தி நகத்தில் ஏற்படும் சொத்தைக்கான மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் சீதாபழ இலை பசை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து காய்ச்சவும். ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

நகங்களில் போட்டுவர நகங்களில் ஏற்படும் சொத்தை, வெடிப்பு குணமாகும். பூஞ்சைகாளான் தொற்று சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. சீதா பழத்தின் செடி நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சிறுதானியங்களை சாப்பிட்டு வந்தால் நகம் பலமாக இருக்கும். நகம் அழகாக வளரும். உடலில் ஏற்படும் கட்டிகள் எளிதில் பழுத்து உடைவதற்கான மருத்துவத்தை காணலாம். முன்னோர்கள் சாதாரண கட்டிகளை மேல்பூச்சு மருந்துகள் மூலம் குணமாக்கினர். சுண்ணாம்புடன் தேன், மஞ்சளை குலைத்து கட்டிகளின் மேல் பூசி, ஓரிரு நாட்கள் வைத்திருப்பதன் மூலம் உள்ளிருக்கும் நச்சுக்கள் வெளியேறி கட்டிகள் விரைவில் குணமாகும். 

Source : Dinakaran

No comments:

Post a Comment