Friday, July 15, 2016

பலசாலி தேங்காய் மட்டை!

தேங்காய் மட்டையை உரிப்பது எவ்வளவு சிரமம் என்பது அதை உரிப்பவர்களுக்கு தான் தெரியும். இயற்கை உருவாக்கிய தேங்காய் மட்டையின் உள்ளே உள்ள பலத்தை, கட்டடங்களுக்கு பயன்படுத்த முடியுமா என, ஜெர்மனியைச் சேர்ந்த பிரெய்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
தேங்காய் மட்டைகளில் மூன்று விதமான அடுக்குகள் உள்ளன. மேலே உள்ள தோல், நார் மிக்க நடுப்பகுதி, கடினமான உள் ஓட்டுப்பகுதி.உரிக்காத தேங்காயை பல கிலோ எடை கொண்டு வேகமாக தாக்கி, அதன் உட்பகுதி எப்படி உடையாமல் தன்னை காத்துக் கொள்கிறது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். உள்ளே உள்ள ஓடு உடையாத அளவுக்கு, இந்த மூன்று பகுதிகளும் விசையை உள்வாங்கி நீள வாக்கில் சிதறடித்து சமாளிப்பதை அவர்கள் கண்டுகொண்டனர்.இதே போன்ற நார் அடுக்குகளை, பருத்தி நுால்கள் மூலம் உருவாக்கி சிமென்ட் பூச்சில் வைக்க முடிந்தால், மிகவும் பலமான கட்டடங்களை உருவாக்க முடியும் என, ஜெர்மனி விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவர்களது ஆராய்ச்சி தொடர்கிறது. இது நடைமுறைக்கு வந்தால், பூகம்பம் போன்ற பேரிடர்களில் இருந்து தப்பிக்க உதவும் கட்டடங்களை உருவாக்க முடியும். 


Source : Dinamalar

No comments:

Post a Comment