Thursday, July 21, 2016

சூரம்பட்டி அணையில் இருந்து வண்டல் மண் இலவசமாகப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சூரம்பட்டி அணையில் இருந்து வண்டல் மண்ணை இலவசமாகப் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 சூரம்பட்டி அணைக்கட்டுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிவிட்டு அணையைத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு ஜூலை 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 123 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் பாசன வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 560-க்கும் மேற்பட்ட வீடுகளும் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளன.
 இந்நிலையில், அணையில் இருந்த மாசுபடிந்த நீர் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து, அணையில் தேங்கிக் கிடக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் அறிவிப்பு ஈரோடு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.
 இதையடுத்து, வண்டல் மண்ணை இலவசமாக வழங்குவதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், கீழ்பவானி வடிநிலக் கோட்டப் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜுவிடம் திங்கள்கிழமை வழங்கினார். கீழ்பவானி வடிநிலக் கோட்டத்தில் உள்ள அனைத்து உதவிப் பொறியாளர்களுககும் இந்த உத்தரவு நகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விவசாயிகளுக்குத் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, பொதுப்பணித் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
 சூரம்பட்டி அணைக்கட்டில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாகப் பெறலாம். விவசாயிகள் தங்களது நிலத்துக்கான சிட்டா, அடங்கல் நகலுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்றையும் இணைத்து ஈரோடு, கோணவாய்க்காலில் உள்ள உதவிக் கோட்டப் பொறியாளர் ராதாகிருஷ்ணனிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
 விண்ணப்பத் தேதியில் இருந்து இரு தினங்களுக்குள் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு டிராக்டரில் 4 லோடு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். அவர்களின் தேவையைப் பொருத்து அதிகபட்சம் 5 லோடு வரை அனுமதிக்கப்படும் என்றார்.

Source : Dinamani

No comments:

Post a Comment