Friday, July 22, 2016

மண் இல்லாமல் செடி வளர்ப்பு: புதுச்சேரி விவசாயி சாதனை

மண் இல்லாமல் தண்ணீரிலேயே செடிகளை, ஹைட்ரோபோனிக் முறையில் விளைவித்து புதுச்சேரியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சாதனை புரிந்துள்ளார்.
புதுச்சேரியை அடுத்த கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் டி.வெங்கடபதி. இவர், விவசாயத்தில் ஆராய்ச்சி செய்து, கனகாம்பரப்பூ செடிகளில் பல்வேறு ரகங்களை உருவாக்கி உள்ளார்.
இதற்காக நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு, அதனைச் செயல்படுத்துகிறார்.
இவரது சேவைக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இவரை தில்லிக்கு வரவழைத்து பாராட்டியுள்ளார். மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் வழங்கி உள்ளது.
ஏற்கெனவே, இவர் அணுக்கதிர் வீச்சு மூலம் செடிகளை உருவாக்கி வருகிறார். சுண்டக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரே செடியில் கத்தரி, மிளகாய், தக்காளி ஆகிய காய்கறிகளை விளைவித்துள்ளார்.
தண்ணீரில் செடி வளர்ப்பு: தற்போது அவர், மண் இல்லாமல் தண்ணீரிலேயே தாவரங்களை விளைவிக்கும் ஏஹ்க்ழ்ர்ல்ர்ய்ண்ஸ்ரீள் என்ற நவீன முறையில், வீட்டிலேயே செடிகளை வளர்த்து வருகிறார். குறிப்பாக அவரை, கத்தரி, கனகாம்பரம், சவுக்கு போன்ற உயர் ரக திசுக்கள் முறையிலான செடிகளை வளர்க்கிறார். ஹைட்ரோபோனிக் செடிகளின் சிறப்பு அம்சமே அவற்றுக்கு கிருமி தாக்குதலோ அல்லது தொற்று நோய்களோ ஏற்படாது என்பதாகும். இம்முறையிலான செடிகளின் வளர்ப்பு காலம் 3 மாதங்களே ஆகும்.
இதுகுறித்து முன்னோடி விவசாயியான டாக்டர் வெங்கடபதி கூறியது: ஹைட்ரோபோனிக் செடி வளர்ப்பு முறை, அமெரிக்காவில் அதிகளவில் நடைமுறையில் உள்ளது. நோய்த் தாக்குதலுக்கு ஆளாகாத செடிகளை விளைவித்து, அதன் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கலாம். பொதுமக்களுக்கு தரமான காய்கறிகள், கனிகளை இதன் மூலம் தரமுடியும்.
சாதாரண வகையில் விவசாயம் செய்தால், குறைந்தது மகசூல் ஈட்ட 6 மாதங்கள் ஆகும். ஆனால், ஹைட்ரோபோனிக் முறையில் செடிகளை 3 மாதத்திலேயே விளைவித்து அதிக மகசூலை ஈட்டலாம். குறைந்தது 32 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் 12 மணி நேரம் இச்செடிகள் இருக்க வேண்டும். தண்ணீரில் பிஎச் அளவை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
மேலும் பூமிக்கடியில் 60 அடி ஆழத்தில் கிடைக்கும் கனிமச் சத்துகளாலான மண், நீரை உறிஞ்சி வெளிப்படுத்தும் கற்களை உரமாக இட்டு இச்செடிகளை விளைவிக்கிறோம். இதனை பெரியளவில் செய்ய திட்டமிட்டுள்ளேன். ஹைட்ரோபோனிக் செடி வளர்ப்பைப் பிற விவசாயிகளுக்கு இலவசமாக கற்றுத்தரவும் ஆர்வமாக உள்ளேன் என்றார் வெங்கடபதி

Source : Dinamani

No comments:

Post a Comment