Wednesday, July 13, 2016

சூரிய ஒளி மின்சக்தியால் மூன்று போக விவசாயம்

தமிழக விவசாயிகள் அரசு வழங்கும் விவசாய மின் இணைப்பு பெற விண்ணபித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கின்றனர். விவசாயிகளின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் சூரிய ஒளி மின் சக்திக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி சொந்த நிலத்தில் விவசாயம் செய்வோருக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.3 லட்சம் 84 ஆயிரம் மானியம் கிடைக்கிறது. பயனாளிகள் ரூ.1.17 லட்சம் செலவிட்டால் போதும் 25 ஆண்டுக்கு தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படாது. விவசாயிகள் பலர் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் மதுரை மாவட்டம் குலமங்கலத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி வி.கிருஷ்ணன் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி ஆண்டுக்கு நெல், சிறுதானியம் என மூன்று போக சாகுபடி செய்து அசத்துகிறார்.

அவர் கூறியதாவது: குலமங்கலம் அருகே தண்டலையில் சொந்த நிலம் மற்றும் குத்தகை நிலம் உள்ளன. மூன்று ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் பாசிப் பயறு, 50 சென்டில் கேழ்வரகு பயிரிட்டுள்ளேன். உதாரணத்துக்கு கேழ்வரகு அறுவடை முடிந்ததும், குதிரைவாலி சாகுபடி செய்வேன். பாசிப்பயறு அறுவடை முடிந்து, உளுந்து சாகுபடி செய்வேன். இப்படி நிலத்தில் வெவ்வேறு தானிய வகைகளை பயிரிடும்போது விளைச்சல் நன்றாக உள்ளது. 
தவிர சீசனுக்கு ஏற்ப அனைத்து காய்கறிகளும் விளைவிக்கிறேன். 27 அடி ஆழம் கொண்ட கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருக்கும். சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி ஆண்டுக்கு மூன்று போக விவசாயம் செய்கிறேன். 
காலையில் வெயில் அடிக்க துவங்கியது முதல் மாலையில் வெயில் மங்கும் வரை சூரிய ஒளி மின்சாரம் மூலம் கிணற்றில் இருக்கும் மோட்டார் பம்பு இயங்கி கிணற்று நீரை வயல்களுக்கு பாய்ச்சும்.
செலவு மிச்சம்: வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச, வரப்பை சரி செய்ய ஆட்கள் தேவையில்லை. அதை நானே பார்த்து கொள்கிறேன். நெல் சாகுபடியை பொறுத்தமட்டில் இயந்திர நடவு, அறுவடை செய்வதால் ஏக்கருக்கு கூலியாக ஒரு மூடை நெல் கொடுக்கும் செலவு மிச்சம். மின்சார கட்டண செலவு, சூரிய ஒளி மின்சார பேனல் பராமரிப்பு செலவு, பேட்டரி செலவு என எதுவும் இல்லை. 
2012ல் நெல் நடவு முதல் அறுவடை வரை அனைத்தும் இயந்திரம் மூலம் செய்ததால் மத்திய வேளாண் துறை சார்பில் தேசிய அளவிலான முன்னோடி விவசாயி விருது கிடைத்தது. 
கொஞ்சம் முதலீடு அதிக வருவாய் என கொள்கை அடிப்படையில் விவசாயம் செய்வதால் விவசாயத்தில் லாபம் இரட்டிப்பாக உள்ளது என்றார்.
விவசாயத்தில் தொடர்ந்து சாதனை புரிந்து வருவதால் 2011 முதல் 2016 ஜூன் வரை தேசிய, மாநில, மாவட்ட அளவில் பல விருதுகளை பெற்று வருகிறார். தொடர்புக்கு 89737 37379.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Source : Dinamalar

No comments:

Post a Comment