Monday, August 8, 2016

இயந்திர நெல் நடவிற்கு மானியம் ....உயர்வு எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க முடிவு


நடப்பாண்டில் இயந்திர நெல்நடவிற்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும், விவசாயிகள் இயந்திர நடவை பின்பற்றி கூடுதல் மகசூல் எடுக்க வேண்டும் என்றும் மாநில வேளாண் கூடுதல் இயக்குநர் சங்கரலிங்கம் கேட்டுக் கொண்டார்.
திருந்திய நெல் சாகுபடி முறையை முதலில் வலியுறுத்திய வேளாண் துறை தற்போது இயந்திர நடவு முறையை அமல்படுத்த வலியுறுத்தி வருகிறது. இயந்திர நடவு முறையில் அதிக மகசூல் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு இயந்திர நடவிற்கு பின்னேற்பு மானியமாக எக்டருக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கி வந்தது.
தற்போது கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கான நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது. உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தில் நடந்த இயந்திர நடவு பணியை நேற்று முன்தினம் மாநில வேளாண் கூடுதல் இயக்குநர் சங்கரலிங்கம் நேரடியாக வயலில் ஆய்வு செய்தார்.
கூடுதல் நிதி:
ஆய்வுக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :மற்றுமொரு பசுமைப் புரட்சிக்கு விவசாயிகள் தயாராக வேண்டும் என்பதற்காக வேளாண் துறைக்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது. இயந்திர நடவில் கூடுதல் மகசூல், நோய் தாக்காமல் இருப்பது போன்ற நன்மைகள் கிடைக்கும். கடந்தாண்டு இந்த முறை சாகுபடியில் கிடைத்த அனுபவத்தை வைத்து தற்போது இயந்திர நடவிற்கு கூடுதல் மானியம் வழங்க வேளாண்துறை செய்த சிபாரிசை தமிழக அரசு ஏற்று அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி எக்டருக்கு 3 ஆயிரம் என்பதை எக்டருக்கு ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இயந்திர நடவு மேற்கொள்ள முன்வர வேண்டும்.
உத்தமபாளையத்திற்கு 380 எக்டர், கம்பத்திற்கு 380 எக்டர், சின்னமனுாருக்கு 200 எக்டர் பரப்பிற்கு இந்த ஆண்டு மானியம் வழங்கப்படும். அடுத்த ஆண்டு இன்னமும் கூடுதலாக மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார். கூடுதல் வேளாண் இயக்குநருடன் தேனி மாவட்ட இணை இயக்குநர் மூர்த்தி, உத்தமபாளையம் உதவி இயக்குநர் பாண்டி உள்ளிட்ட வேளாண் அதிகாரிகள் இருந்தனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment