Thursday, August 4, 2016

அடுத்த சந்ததிக்கு இயற்கை விவசாயம் அவசியம் அறைகூவல்! ரசாயன பயன்பாட்டால் நுண்ணுயிர்கள் அழிப்பு

இயற்கை முறை விவசாயத்தை, வருங்கால சந்ததிக்கு விட்டு செல்ல வேண்டும்' என, விழாவில் அறைகூவல் விடுக்கப்பட்டது.
ஊட்டி அருகே தாம்பட்டியில், தேயிலை விவசாயக் குழுவுக்கான, இடுபொருள் உரக்கிடங்கு திறப்பு விழா நடந்தது.
வானம் பார்க்கும் பூமி
விவசாயக்குழு ஆலோசகர் லட்சுமி நாராயணன் பேசுகையில், “கடந்த காலங்களில் உருளைக் கிழங்கு விவசாயத்துடன் ராகி, கோதுமை, பாப்ரை எனப்படும் சிறுதானிய சாகுபடியை அதிகளவில் மேற்கொண்டோம்; அதிகளவு இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டது. தற்போது அந்நிலை மாறிவிட்டது. காலநிலை மாற்றத்தால், நீலகியில் வெப்பம் அதிகரித்து விட்டது; மழை பொய்த்து போகிறது. “அளவுக்கதிகமான ரசாயன உர பயன்பாடால் மண் வளம் கெட்டு, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. நம் மண், பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்; இயற்கை முறை விவசாயத்தை தோட்டக்கலை துறை ஊக்குவிக்க வேண்டும். இயற்கை முறை விவசாயத்துக்கு மானியம் வழங்க வேண்டும்,” என்றார்.
மெல்ல வரணும் மாற்றம்
தேயிலை வாரிய உதவி இயக்குனர் ஹரிபிரகாஷ் பேசுகையில்,“விவசாய நிலங்களில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை மெல்ல, மெல்ல தவிர்த்து, இயற்கை உர பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். வருங்கால சந்ததிக்கு இயற்கை முறை விவசாயத்தை விட்டு செல்ல வேண்டும்,” என்றார்.
'உபாசி' வேளாண்மை அறிவியல் மைய தலைவர் டாக்டர் ராமமூர்த்தி பேசுகையில்,“கடந்த காலங்களில், மண்ணில் உள்ள பூச்சிகளை உண்டு, மண் வளத்தை காக்கும் நுண்ணுயிர்கள் இயற்கையாவே மண்ணில் இருந்தன. ஆனால், ரசாயன உர பயன்பாட்டால், அந்த நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு மண் வளம் நாசமாகிவிட்டது. இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் பசுந்தேயிலை மூலம் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துõளுக்கு உலக சந்தையில் கிராக்கி அதிகம்,” என்றார்.
தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,“விவசாயிகளுக்கு மானிய விலையிலான கேரட் விதையுடன், பஞ்ச காவியம், தச காவியம் வழங்கி வருகிறோம்,” என்றார்.

கெட்டு கிடக்கு மண் வளம்...
வேளாண்மை துறை (தரக்கட்டுபாடு) உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்,“பொதுவாக, மண்ணில் உள்ள கார, அமிலத் தன்மையின் அளவு (பி.எச்.,) 5ல் இருந்து, 5.5 புள்ளிகளுக்கு மேல் இருக்க வேண்டும். அப்போது தான், அந்த மண் வளம் நிறைந்தது என்பது அர்த்தம். ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மண்ணில் உள்ள பி.எச்., அளவு, 4 புள்ளிகளுக்கு குறைவாகவே உள்ளது. மண்ணில் இயற்கை சத்தை அதிகரிக்க, இயற்கை உரமான 'டாலமைட்' இட வேண்டும். மண் வளத்தை சரி செய்த பிறகே


விவசாயம் செய்ய வேண்டும். அப்போது தான், இயற்கை விவசாயம் வெற்றிகரமாக அமையும்,” என்றார்.

Sourcc : Dinamalar

No comments:

Post a Comment