Friday, August 5, 2016

நில சம்பங்கி



நன்றி குங்குமம் டாக்டர்

மூலிகை மந்திரம்

சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்


எண்ணற்ற சிகிச்சை முறைகள் இன்றைய மருத்துவத்தில் உள்ளன. இவற்றில் மலர்களைப் பயன்படுத்தும் அரோமா தெரபி என்ற சிகிச்சை இப்போது உலகெங்கும் பிரபலமாகி வருகிறது. இந்த நறுமண சிகிச்சையில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட மலர்தான் நில சம்பங்கி!

நில சம்பங்கிப்பூவை நேரடியாக மருத்துவத்துக்குப் பயன்படுத்துவதை விட, அதன் எண்ணெயைப் பயன்படுத்தும் வழக்கம்தான் அதிகமாக உள்ளது. இதன் எண்ணெயை முகர்வதாலும், உடலில் தேய்த்துக் கொள்வதாலும் மருத்துவரீதியாகப் பெரும் மாற்றத்தை உணர முடியும். சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் அளவு சம்பங்கி மலர் எண்ணெயில் என்ன இருக்கிறது என்ற ஆவல் உங்களுக்கு எழலாம்.

Benzyl alcohol, Butric acid, Eugenol, Farnesol, Geraniol, Menthyl benzoate, Menthyl anthranite, Nerol போன்ற எண்ணற்ற மருத்துவ வேதிப்பொருட்கள் நில சம்பங்கியில் மிகுதியாக உள்ளன. இதுதான் அதன் மருத்துவ ரகசியம். இத்தனை மகத்துவம் கொண்ட நில சம்பங்கியின் மருத்துவ குணங்களைக் கொஞ்சம் விரிவாகக் காண்போம்… சம்பங்கியில் அகச்சம்பங்கி, காட்டு சம்பங்கி, சிறு சம்பங்கி, கொடி சம்பங்கி, நாக சம்பங்கி என பலவகைகள் உள்ளன.

இவற்றுள் நில சம்பங்கியையே பெரும்பாலும் சிகிச்சைக்காகப் பயன்படுத்துகிறோம். இதனால்தானோ என்னவோ, நிலசம்பங்கிதான் அதிகமாகப் பயிரிடப்படுவதும் எளிதில் கிடைப்பதுமாக இருக்கிறது. நில சம்பங்கிக்கு ஆங்கிலத்தில் Mexican tuberose என்று பெயர். Polianthes tuberose என்பது இதன் தாவரவியல் பெயர். வடமொழியில் ‘ரஜனி கந்தா’என்னும் பெயரால் அழைக்கிறார்கள். இதற்கு இரவில் மலர்ந்து மணம் தரும் மலர் என்பது பொருள். இதன் காரணத்தாலேயே ‘இரவு ராணி’ என்றும் அழைப்பது உண்டு. கன்னடத்தில் சுகந்தராஜி என்றும் தெலுங்கில் கெல சம்பங்கி என்றும் கூறுகிறார்கள்.

நில சம்பங்கி எண்ணெயின் மருத்துவப் பயன்கள்

சம்பங்கி எண்ணெயை பாலியல் சார்ந்த சிகிச்சைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. நறுமணம் மிக்க மலர் என்பதால் பாலியல் விருப்பத்தைத் தூண்டக்கூடிய குணம் கொண்டதாகவும், பெண்களின் குழந்தையின்மைக்கான காரணிகளில் ஒன்றான பெண்ணுறுப்பு இறுக்கம் (Frigidity),ஆண்மைத் தன்மை குறைவு போன்றவற்றை நிவர்த்தி செய்யும் திறன் கொண்டதாகவும் நில சம்பங்கி விளங்குகிறது. சம்பங்கியின் மணம் மூளைக்குப் பரவி, உள்ளுறுப்புகளைத் தூண்டி அவற்றுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சீரான பாலியல் உறவுக்கு உதவுகிறது. இதனால் உறுப்பு தளர்வு, இயலாமை போன்ற குறைபாடுகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் வியர்வை நாற்றம் தவிர்க்கப்பட்டு அனைவரோடும் கூச்சமின்றி பழகும் சூழ்நிலையை சம்பங்கி எண்ணெய் உருவாக்கிக் கொடுக்கிறது. சம்பங்கியின் நறுமணம் மனிதனின் மனதுக்கு அமைதியைத் தருகிறது. மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், படபடப்பு, நரம்புத் தளர்ச்சி, வலிப்பு, தசைப் பிடிப்பு, குத்திருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் தணிக்க உதவுகிறது. சம்பங்கியின் நறுமணம் நரம்புகளுக்கும், சுவாச உறுப்புகளுக்கும் சுகம் தரவல்லது.

சுவாசப்பாதை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஏற்பட்ட அழற்சியைத் தனித்து சீரான சுவாசத்துக்குத் துணை செய்கிறது. சம்பங்கி உடலின் ரத்த ஓட்டத்தைத் தூண்டி உடலுக்கு உஷ்ணத்தைப் பரவச் செய்கிறது. இதனால் பனிக்காலத்திலும் குளிரைத் தாங்கும் தன்மையை உடல் பெறுகிறது. உடல் வெப்பம் பெறுவதால் சுவாசப் பாதையிலும் சுவாச அறையிலும் சளி, கோழை ஆகிய துன்பம் தரும் பொருட்கள் சேராத வண்ணம் தடுக்கப்படுகிறது.

சம்பங்கி எண்ணெயை மேல் பூச்சாகப் பயன்படுத்துவதால், தொற்றுக் கிருமிகள் தாக்காத வண்ணம் சருமப் பாதுகாப்பைப் பெறுகிறது. சருமத்தின் மேல் ஏற்படும் வெடிப்புகளும் இதனால் தவிர்க்கப்படுகிறது. சம்பங்கி எண்ணெயைத் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயோடு சேர்த்துப் பயன்படுத்துவதால் தலைமுடி உதிர்வு, தலைமுடியின் முனைகளில் உடைதல், இளநரை போன்ற தொல்லைகள் விலகுகின்றன.

Source : Dinakaran

No comments:

Post a Comment