Monday, September 26, 2016

பசுமைக்குடில் வௌ்ளரி சாகுபடியில் பலமடங்கு லாபம்

வெள்ளரி சாகுபடியில் திறந்த வயல்வெளியில் இரண்டு ஏக்கரில் கிடைக்கும் மகசூலை விட அரை ஏக்கரில் பசுமைக்குடில் அமைத்து மூன்று மடங்கு கூடுதல் மகசூல் ஈட்டலாம் என்கிறார், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிள்ளையார்நத்தம் விவசாயி கோவிந்தராஜ்.
விவசாயம் மீதான ஈர்ப்பால் சொந்த ஊரில் வெள்ளரி, பாகற்காய் போன்ற காய்கறி பயிர்களை பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். தோட்டக்கலை துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சென்ட் நிலத்தில் பசுமைக்குடில் அமைத்துள்ளார். இதற்காக அவருக்கு 24 லட்சத்து 68 ஆயிரத்து 250 ரூபாய் செலவானது. மானியமாக 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தோட்டக்கலைத்துறை வழங்கியது.கோவிந்தராஜ் கூறியதாவது: மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்ய முதலில் தயக்கமாக இருந்தது. இதனால் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி, உதவி இயக்குனர் கலைச்செல்வனுடன் ஆலோசித்து பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி பணியில் இறங்கினேன். 50 சென்ட் நிலத்தில் ஐந்து லட்சம் ரூபாயில் பசுமைக்குடில் அமைத்தேன். கடந்த டிசம்பரில் வெள்ளரி விதை வாங்கி நடவு செய்தேன். பின் அதை பாத்தி கட்டி பசுமைக்குடிலில் வளர்த்தேன். 28 நாட்களில் பூக்கத் துவங்கியது. 43 வது நாளிலிருந்து காய்களை பறிக்க துவங்கினோம். இயற்கை உரம் பயன் படுத்தினேன். ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய் வரை விலை போகிறது. உற்பத்தி செலவு கிலோவிற்கு 12 ரூபாய் ஆகிறது.'ஆப் சீசன்' காலங்களிலும் அதிகபட்சமாக கிலோ 60 ரூபாய் வரை கிடைக்கும். இதற்கு முன்பு ஒரு சாகுபடி முடித்து உள்ளோம். இதில் எங்களுக்கு 24.7 டன் மகசூல் கிடைத்தது. இது சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில் 
கிடைக்க வேண்டியதாகும். திறந்த வயல்வெளியில் கிடைக்கும் மகசூலை காட்டிலும் பசுமைக்குடில் மூலம் நான்கு மடங்கு மகசூல் ஈட்டலாம். 
பசுமைக்குடிலில் கட்டுப்பாடான சூழல் நிலவுவதால், பயிர் வளர்ப்பில் இடர்பாடுகள் இல்லை. பராமரிப்பு ஆட்கள் செலவும் குறைவு. தற்போது என் தோட்டத்தில் ஏழு பேர் பணிபுரிகின்றனர். ஒட்டன்சத்திரம், மதுரை மார்க்கெட்டிற்கு வெள்ளரி அனுப்பினேன். தற்போது உள்ளூர் தேவைக்கு சரியாக இருக்கிறது. தரம் சீராக கிடைப்பதால் சந்தைப் படுத்துவது எளிதாக இருக்கிறது. முறையாக நடவு செய்து பராமரித்து வளர்த்தால் உற்பத்தி செலவு நீங்கலாக ஆண்டுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும். நான் சென்னையில் பணிபுரிந்தாலும் வாட்ஸ்ஆப் மூலம் தோட்ட பணியாளர்களை தொடர்பு கொண்டு விவசாயம் செய்கிறேன், என்றார். 
தொடர்புக்கு: 96771 24505.
- எம்.ரமேஷ்பாபு, மதுரை.

Source : Dinamalar

No comments:

Post a Comment